குன்றத்தூர் சாலைகளில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகள்- தொற்று நோய் பரவும் அபாயம்
- இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் சுடுகாடும் அந்த பகுதியிலேயே அமைந்துள்ளது.
- சாலையோரம் அலட்சியமாக குப்பைகளை கொட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
சென்னை குன்றத்தூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் சாலையோரம் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. குறிப்பாக வண்டலூர்-மீஞ்சூர் புறவழிச்சாலையில் சர்வீஸ் சாலை அருகே அதிக அளவில் குப்பைகள் மலை போல் குவிந்து காணப்படுகிறது. இவ்வாறு குவிந்து கிடக்கும் குப்பைகள் காரணமாக கடும் துர்நாற்றம் வீசி காணப்படுவதோடு, அந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது.
இதனால் அந்த வழியே சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள், துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் நிலையே உள்ளது. மேலும், சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை அங்கு சுற்றித் திரியும் மாடுகள், நாய்கள் போன்றவை கிளறி விடுவதால் சாலை முழுவதும் குப்பைகள் சிதறி அந்த பகுதியே அலங்கோலமாக காட்சியளிக்கிறது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் குப்பை கொட்டும் இடத்தின் அருகிலேயே பிரபல தனியார் பள்ளி மற்றும் கல்லூரியும் அமைந்துள்ளது. இதனால் இந்த குப்பைகளால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
அத்துடன் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் சுடுகாடும் அந்த பகுத்யிலேயே அமைந்துள்ளது. இதுபோன்று மலை போல் குப்பைகள் குவிந்து தொடர்ந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் அந்த பகுதியில் கொடிய தொற்று நோய்கள் பரவும் அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, சாலையோரம் அலட்சியமாக குப்பைகளை கொட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், அங்கு மலைபோல் தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.