ஆலங்குளத்தில் அரசு பள்ளி முன்பு மாதக்கணக்கில் நிறுத்தப்பட்டிருக்கும் கழிவு லாரி - துர்நாற்றம் வீசுவதால் மாணவர்கள் அவதி
- விடுமுறை தினமான நேற்று பள்ளியின் வாசல் முன்பு மீண்டும் அந்த கழிவு லாரியை போலீசார் நிறுத்தி உள்ளனர்.
- இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி முன்பாக கழிவுகள் அடங்கிய லாரி மீண்டும் வந்து நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
ஆலங்குளம்:
தமிழகத்தில் கேரளாவிற்கு காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள், அங்கிருந்து திரும்பி வரும்போது அங்குள்ள இறைச்சி, பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை ஏற்றிக்கொண்டு வந்து தென்காசி மாவட்டங்களில் கொட்டிவிட்டு சென்று விடுகிறது.
அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 27-ந்தேதி கேரளாவில் இருந்து பிளாடிக், மருத்துவக்கழிவு என சுமார் 10 டன் கழிவுகளை முறைகேடாக ஏற்றி வந்த லாரியை ஆலங்கு ளத்தில் வாகனச்சோ தனையின்போது போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.
பின்னர் அந்த லாரியை போலீஸ் நிலையத்திற்கு அருகே உள்ள ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறுத்தினர். அந்த லாரியை அங்கு நிறுத்தியதால், ஆசிரியர்கள், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் கடும் சிரமம் அடைந்தனர். மேலும் மாதக்கணக்கில் போலீசார் அந்த லாரியை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றாமல் உள்ளதால், மாணவர்கள் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இதுகுறித்து புகார் எழுந்ததை அடுத்து சில நாட்களாக அந்த லாரி போலீஸ் நிலையம் அருகே நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் விடுமுறை தினமான நேற்று பள்ளியின் வாசல் முன்பு மீண்டும் அந்த லாரியை போலீசார் நிறுத்தி உள்ளனர். இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி முன்பாக கழிவுகள் அடங்கிய லாரி மீண்டும் வந்து நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக போலீசாரிடம், தனியார் பள்ளி முன்பு உங்களால் இப்படி லாரியை நிறுத்த முடியுமா? என ஆசிரியர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் கேள்வி எழுப்பினர். ஆனால் அதனை போலீசார் கண்டு கொள்ளாமல் அலட்சியமான பதிலை கூறி வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர். எனவே உடனடியாக அந்த லாரியை காட்டுப்பகுதிக்குள் எடுத்துச்சென்று விட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.