உள்ளூர் செய்திகள்

காேப்புபடம்

வீடு தேடி சென்று மருத்துவம் - பொதுமக்கள் வரவேற்பு

Published On 2022-06-15 06:08 GMT   |   Update On 2022-06-15 07:56 GMT
  • மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
  • '108' அவசரகால ஊர்தி சேவை திட்டம் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.

காங்கயம் :

பொது மக்களுக்கு அரசின் மருத்துவ சேவைகளை வீடுகளுக்கே நேரில் சென்று வழங்கும் விதமாக தமிழ்நாடு அரசுமக்களைத் தேடி மருத்துவம் என்னும் திட்டத்தை துவக்கியது.இத்திட்டத்தின் கீழ் சுகாதார ஆய்வாளர்கள், கிராமப்புற செவிலியர், பெண் சுகாதார தன்னார்வலர்கள் உள்ளிட்டவர்கள் மூலம் சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, முடக்குவாதம், பெண்களுக்கு கருப்பை,வாய் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறிவதற்காக ஆய்வுக்கு பரிந்துரைத்தல் மற்றும் நீண்ட நாள் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டு அதற்குரிய மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள சாவடிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சாவடிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராமப் பகுதிகளுக்கு மருத்துவக் குழுவினர் கிராம பகுதிகளில் உள்ள படுத்த படுக்கையாக மருத்துவமனைக்கு வர முடியாத நிலையில் இருக்கும் நோயாளிகளை அவர்களின் வீடுகளுக்கே சென்று சந்தித்து, மருத்துவ ஆலோசனைகள் வழங்கி சிகிச்சை மேற்கொண்டனர். மேலும் அவர்களுக்கு மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டது.

மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் பட்டியல் சேகரித்து, அவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதேபோல் தினசரி காங்கயம் சுற்றுவட்டார பகுதிகளில் ஒவ்வொரு பகுதியாகச் சென்று சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் என மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் 2008 ம் ஆண்டு பொதுமக்களின் இன்னுயிரை காக்கும் '108' அவசரகால ஊர்தி சேவை திட்டம் பொதுமக்களிடையே வரவேற்ப்பை பெற்றது போல மக்களைத் தேடி மருத்துவம் திட்டமும் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.

Tags:    

Similar News