நல்ல நீர், மண்வளத்தை அடுத்த தலைமுறைக்கு விட்டுசெல்ல வேண்டும்- இயற்கை விவசாயி
- பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, சீரகசம்பா, கிச்சலி சம்பா, காட்டுயாணம் போன்ற 10 விதமான நெல் ரகங்கள் 30 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
- புலி, சிங்கம் இருந்தால் தான் மலைவளம் பாதுகாக்கப்பட்டு நல்ல மழையை பெறமுடியும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சார்பில் 8 ஆம் ஆண்டு நெல் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை செயலாளர் சுதாகர் தலைமை வகித்தார். சீர்காழி கோட்டாட்சியர் உ.அர்ச்சனா, பள்ளி தலைமைஆசிரியர் அறிவுடைநம்பி, வழக்குரைஞர் சுந்தரய்யா, சாயிராம் கல்விநிறுவன தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளையை சேர்ந்த கரு.முத்து வரவேற்றார். இயற்கை வேளாண் வல்லுனர்கள் சித்த மருத்துவர் தஞ்சை சித்தர் மரபுவகை உணவு வகைகள் குறித்தும், தமிழர் வேளாண்மை குறித்து ஞாணபிரகாசம், தற்சார்பு பற்றி பாலகிருட்டிணன் இயற்கை உணவு குறித்து சிவகாசி மாறன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
தொடர்ந்து மரபு நெல் ரகங்களை பயிரிடும் விவசாயிகளுக்காக சம்பா பட்டத்திற்கு தேவையான பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, சீரகசம்பா, கிச்சலி சம்பா, காட்டுயாணம் போன்ற 10 விதமான நெல் ரகங்கள் 30 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக துணைவேந்தர் கதிரேசன் சிறந்த முறையில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கினார்.
விழாவில் இயற்கை விவசாயி சிவாஜி பேசுகையில், நம்முடைய பாரம்பரிய நெல் வகைகளை இழந்துவிட்டு தற்போது அயல்நாட்டு ஆங்கிலேய ராசாயன நிறுவனங்களிடம் கையேந்தி நிற்கிறோம்.மருத்துவம் வளர்கிறது என்றால் நாடுவளர்கிறது என அர்த்தமில்லை.நோய்கள் வளர்கிறது என்றே அர்த்தம்.நல்ல நீரை பூமியில் நாம் சேமிக்கவேண்டும்.
தற்போது தண்ணீரை காசுகொடுத்து வாங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.புலி, சிங்கம் இருந்தால்தான் மலைவளம் பாதுகாக்கப்பட்டு நல்ல மழையை பெறமுடியும். அதனால்தான் புலிகளை காக்க அரசு தற்போது பெரும் முயற்சி செய்கிறது.
மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழவேண்டும்.நாம் அனுபவிக்கும் நல்லநீர், நல்ல மண்வளத்தை நமது அடுத்த தலைமுறைக்கு நாம் கொடுத்துசெல்லவேண்டும். நம் கண்டுபிடிப்புகள் மனித இனத்தை அழிக்ககூடியதாகவே உள்ளது. மண், நீர்வளத்தை காக்கவேண்டியதன் அவசியத்தை இன்றைய தலைமுறைக்கு பாடதிட்டத்தில் சேர்த்து சொல்லித்தரவேண்டும். குழந்தைகளை சூரியஒளி படும்படி மண்ணோடு விளையாட விட வேண்டும் இயற்கையான எதிர்ப்பு சக்தி உருவாகினால்தான் நோய்கள் ஏற்படாது என்றார்.
விழாவில் இந்தியாவில் உள்ள ஐந்நூறுக்கு மேற்பட்ட மரபு நெல் ரகங்கள் கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டிருந்தது. நஞ்சில்லா உணவு, பலா பழ அல்வா, பலா பழ ஐஸ் கிரீம், துணி பை, சித்தமருத்துவம், அரிய வகை மூலிகை, பாரம்பரிய தானிய தின்பண்டங்கள், ஆகியவையும் காட்சிப் படுத்தப்பட்டிருந்தது.
இயற்கை விவசாயத்திற்கு தேவையான அனைத்து ஆலோசனை வழிமுறைகளையும் விவசாயிகளுக்கு வழங்கினர். நாட்டு காய்கறி விதைகள் விற்பனையும் நடைபெற்றது.விழாவில் பங்கேற்ற வர்களுக்கு பாரம்பரிய அரிசியில் செய்யப்பட்ட உணவுகள் வழங்கப்பட்டது.