தென்காசியில் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு-5 தளங்களுடன் தயாராகும் கட்டிடத்தை பார்வையிட்டனர்
- அடைக்கலப்பட்டினத்தில் உள்ள டி.டி.டி.ஏ. தூய பவுல் நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுடன் மதிப்பீட்டு குழுவினர் கலந்துரையாடினார்.
- வல்லத்தில் ரூ.48.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கால்நடை மருந்தக கட்டிடத்தை மதிப்பீட்டு குழுவினர் பார்வையிட்டனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுத்தலைவர் அன்பழகன் தலைமையில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், ஜவாஹிருல்லா ஆகியோர் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இக்குழுவினர் ஆலங்குளம் அருகே அடைக்கலப்பட்டினத்தில் உள்ள டி.டி.டி.ஏ. தூய பவுல் நடுநிலைப்பள்ளியில் சிறார் திரைப்படங்கள் மூலமாக மாணவ ர்களுடைய தனித்திறன் வளர்க்கும் பயிற்சியினை பார்வையிட்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 76,236 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 5 தளங்களுடன் ரூ.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மகப்பேறு மையம் மற்றும் குழந்தைகள் நல கட்டிடத்தை பார்வையிட்டனர். செங்கோட்டை அருகே வல்லத்தில் ரூ.48.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கால்நடை மருந்தக கட்டிடத்தை பார்வையிட்டனர். செங்கோட்டை ஒன்றியம், சீவகநல்லுார் அரசு தொடக்கப் பள்ளியில் நடைப்பெற்று வரும் இல்லம் தேடி கல்வி மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா, இணை இயக்குநர் (சுகாதரப் பணிகள்) பிரேமலதா, மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின், தொழில் மைய மேலாளர் மாரியம்மாள், மண்டல இணை இயக்குநர்(கால்நடைத் துறை) தியோபிலஸ் ரோஜர், உதவி இயக்குநர் (கால்நடைத்துறை) மகேஷ்வரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.