கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பறந்த அரசு பள்ளி மாணவிகள்
- விமானத்தில் பயணம் செய்தது மகிழ்ச்சி.
- விமானத்தில் பயணம் செய்தது மகிழ்ச்சி. அண்ணா நூலகத்தை சுற்றிப்பார்த்து விட்டு திரும்பி உள்ளனர்.
கோவை:
காரமடை சிக்காரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணார்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்கள் அதிகளவில் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் படிக்கும் ஏழை-எளிய மாணவர்களை சிக்காரம்பாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் ஞானசேகரன் கடந்த 4 ஆண்டுகளாக கோவையில் இருந்து விமானம் மூலம் சொந்த செலவில் சென்னைக்கு அழைத்து சென்று வருகிறார்.
அதன்படி இந்தாண்டு 200 மாணவர்களை சென்னைக்கு விமானத்தில் அழைத்து செல்ல திட்டமிட்டு உள்ள ஞானசேகரன், முதல்கட்டமாக இருமுறை தலா 50 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து சென்றார்.
அங்கு அவர்கள் காலை உணவுக்கு பிறகு மெட்ரோ ரெயில் மூலம் அண்ணா நூலகத்தை சுற்றிப்பார்த்து விட்டு திரும்பி உள்ளனர்.
இந்த நிலையில் ஞானசேகரன் அடுத்தகட்டமாக அரசு பள்ளி மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை கோவை விமான நிலையம் அழைத்து சென்றார். பின்னர் அவர்கள் சென்னைக்கு விமானத்தில் பறந்தனர்.
முன்னதாக சென்னைக்கு விமானத்தில் செல்வது குறித்து மாணவிகள் கூறுகையில், இதுவரை தரையில் நின்று வானத்தில் பறந்த விமானத்தை வெறும் கண்களில் மட்டுமே பார்த்து உள்ளோம்.
ஆனால் ஊராட்சித்தலைவர் உதவியால் நாங்களும் விமானத்தில் பயணம் செய்தது மகிழ்ச்சி என்று தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் இடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.