திண்டுக்கல் அருகே பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பஸ் 30 பயணிகள் உயிர் தப்பினர்
- பைக் மீது மோதுவதை தவிர்க்க டிரைவர் திடீர் பிரேக் அடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் உருண்டு அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 30பயணிகள் உயிர் தப்பினர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி அரசு பஸ் சென்றது. இந்த பஸ்சை வத்தலக்குண்டுவை சேர்ந்த ஸ்ரீதர் பாண்டி (வயது35) என்பவர் ஓட்டி வந்தார்.
திண்டுக்கல் - திருச்சி 4 வழிச்சாலை ம.மு.கோவிலூர் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென குறுக்கே பைக் வந்தது. அதன்மீது மோதுவதை தவிர்க்க டிரைவர் திடீர் பிரேக் அடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உருண்டு அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் உயிர் பயத்தில் அலறினர். அவர்கள் அலறல் சத்தம் கேட்டு பொது மக்கள் பயணிகளை மீட்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் டிரைவர் ஸ்ரீதர்பாண்டி(36), கண்டக்டர் நிலக்கோட்டை சிறுநாயக்கன்பட்டி சிங்கராஜ் (43) மற்றும் பஸ்ஸில் பயணம் செய்த கொசவபட்டி ஜெசிகா (31), உசிலம்பட்டியை சேர்ந்த மகேஸ்வரி (35), மதுமிதா (17), பாரதிபுரம் பவித்ரா (23), சசிகலா (38) ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்களை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 30பயணிகள் உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.