உள்ளூர் செய்திகள் (District)

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அரசு நடவடிக்கை எடுக்கும்: வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேட்டி

Published On 2023-05-03 09:42 GMT   |   Update On 2023-05-03 09:42 GMT
  • மதுக்கரை ரெயில்வே பாதையில் யானைகள் அடிபடுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
  • 22 சதவீதமாக இருக்கும் வனத்தை 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோவை,

கோவை வடகோவையில் உள்ள தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தினை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் இன்று பார்வையிட்டடார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மதுக்கரை பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ துரிதமாக செயல்பட்டு அணைக்கப்பட்டது. வனத்தீயை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் யானைகள் இறப்பது இயற்கை. இருந்தாலும் இறப்பு குறித்தும், யானைகள் மரணத்தை தடுப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

வால்பாறையில் சிறுத்தை தாக்கி ஒருவர் காயம் அடைந்தார். அவருக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. தேவையான வசதிகள் மேற்கொள்ளவும், துறை சார்ந்த அதிகாரிகளுடன் கோவை,வால்பாறை, ஆனைமலை உள்பட பல பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கின்றோம்.

சாடிவயல் உள்பட முகாம்களில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றது என்பது குறித்து ஆய்வு செய்ய உள்ளோம்.

தமிழக யானை பாகன்களை பயிற்சிக்காக இந்தியாவிலேயே முதல்முறையாக தாய்லாந்து அழைத்து சென்றோம். பாகன்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தபட்டுள்ளது.

யானைகள் மின்கம்பங்களில் உரசுவதை தவிர்க்க முள்வேலி கட்டி வைத்து இருக்கின்றோம்.செயற்கை நுண்ணறிவு முறையில் மதுக்கரை பகுதியில் ரெயில்வே பாதையில் யானைகள் அடிபடுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வனத்துக்குள் சாலை அமைத்து இருப்பது தவறானது. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. தவறு செய்தது யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். 22 சதவீதமாக இருக்கும் வனத்தை 33 சதவீதமாக உயர்த்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது முதன்மை தலைமை வன பாதுகாவலர் சுப்ரத் முகபத்ரா, கூடுதல் முதன்மை வன பாதுகாவலர் மற்றும் இயக்குநர் சேவா சிங், வன பாதுகாவலர் மற்றும் கலை இயக்குனர் (ஆனைமலை புலிகள் காப்பகம்) ராமசுப்பிரமணியம், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News