மீனவ கிராம மக்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்
- மீனவர்களிடம் இருந்து 62 மனுக்கள் பெறப்பட்டன.
- ரூ.20 லட்சம் மதிப்பிலான குளிரூட்டப்பட்ட 4 சக்கர வாகனம் பயனாளிக்கு வழங்கப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மீனவ கிராம மக்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பவர்பாயின்ட் வாயிலாக மீனவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் மீனவர்கள் தங்களது மீனவ கிராமத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகளை மனுக்களாக அளிக்க அறிவுருத்தினார்.
அதனை தொடர்ந்து மீனவர்கள் மாவட்ட கலெக்டரிடம்கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். மேலும் இக்கூட்டத்தில் மீனவர்களிடமிருந்து 62 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
முன்னதாக, மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பாக செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 40 சதவீத மானியத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான குளிரூட்டப்பட்ட நான்கு சக்கர வாகனம் சந்திரபாடி மீனவ கிராமத்தைச் சேர்ந்த கிருத்திகா என்பவருக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.
கூட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாள விநாயக அமுல்ராஜ், மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு வேணுகோபால், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா ,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நரேந்திரன், உதவி இயக்குநர் (மீன்வளம்) ராஜேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.