அன்னூரில் பூட்டிய வீடுகளில் கைவரிசை
- ஜெயிலில் சக கைதிகளிடம் பழகி கொள்ளையனாக மாறிய வாலிபர்
- 15 பவுன் நகையுடன் போலீசில் சிக்கினார்
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் அன்னூர் ஏ.எம்.காலனி பகுதியை சேர்ந்தவர் மைதீன்பாய் (வயது 40). இவர் கைகாட்டி பகுதியில் சைக்கிள் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அவர் கடந்த 26-ந் தேதி குடும்பத்துடன் சிறுமுகை பூலுவம்பாளையம் பகுதியில் உள்ள இன்னொரு வீட்டுக்கு சென்று தங்கினார். அடுத்த நாள் வீடு திரும்பியபோது முன்பக்க கதவு திறந்து கிடந்தது. எனவே அதிர்ச்சி அடைந்த மைதீன் வீட்டு க்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகை கள் கொள்ளை போனது தெரிய வந்தது.
இதுகுறித்து மைதீன் அன்னூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி பாலாஜி, அன்னூர் இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. பின்னர் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்து சென்றனர்.
இதற்கிடையே போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா, சப்இன்ஸ்பெக்டர் விக்னேஸ்வரன் தலைமையில் 5 பேர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்தனர்.
இதில் மர்மநபர் ஒருவர் மைதீன்பாய் வீட்டில் இருந்து நைசாக வெளியே வந்து இருசக்கர வாகனத்தில் தப்பி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் கோவை, அன்னூர், காந்திபுரம், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதன்ஒருபகுதியாக அன்னூர் நகர பகுதியில் போலீஸார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தார்.
எனவே போலீசார் சந்தேகத்தின்பேரில் அந்த நபரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியை சேர்ந்த தினேஸ்குமார் (வயது 30) என்பதும், மைதீன்பாய் வீட்டில் 15 பவுன் நகைகள் கொள்ளை அடித்ததையும் ஒப்புக்கொண்டார்.
தொடர்ந்து அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படு வதாவது:-
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலை சேர்ந்த தினேஸ்குமார் மீது அங்குள்ள போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை மற்றும் 3 அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதற்காக அவரை போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
அங்கு தினேஸ்குமாருக்கு கொள்ளை வழக்குகளில் கைதாகி சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகளுடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர் சக கைதிகளிடம் கொள்ளை அடிப்பது எப்படி, போலீசாருக்கு கண்ணாமூச்சி காட்டிவிட்டு தப்பிப்பது எப்படி என்பது பற்றிய விவரங்களை அறிந்துகொண்டார்.
தொடர்ந்து அவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்தார். பின்னர் சொந்த ஊரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்தார். அவருக்கு அந்த வேலை பிடிக்கவில்லை.
எனவே தினேஸ்குமார் வேலைதேடி கோவைக்கு புறப்பட்டு வந்தார். அப்போது அவர் அன்னூரில் வீடு எடுத்து தங்கினார். பின்னர் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு அன்னூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டார். தொடர்ந்து அவர் மைதீன்பாய் வீட்டில் முன்கதவு பூட்டை உடைத்து கொள்ளை அடித்து தப்பியது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 15 சவரன் நகைள் மீட்கப்பட்டன.
இதையடுத்து மைதீன்பாய் வீட்டில் கொள்ைள அடித்ததாக தினேஸ்குமாரை அன்னூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.அன்னூரில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையன் 10 நாட்களுக்கு பின் மீண்டும் திருட வந்தபோது போலீசார் வாகன சோதனையில் சிக்கி ஜெயிலுக்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.