உள்ளூர் செய்திகள்

சிதம்பரம் அருகேயுள்ள பிச்சாவரம் அரசு சுற்றுலா விடுதி அறையில் கிடந்த கைத்துப்பாக்கி: தலைத்தெறிக்க ஓடிய துப்புரவு பணியாளர்கள்

Published On 2023-11-07 07:19 GMT   |   Update On 2023-11-07 07:19 GMT
  • வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் சிதம்பரம் நடராஜர் கோவில், பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு வந்து செல்வது வழக்கம்.
  • கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமிற்கு தகவல் கொடுத்தார்.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் சுற்றுலா மையம் உள்ளது. இங்கு தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து படகு சவாரி செய்து செல்வர். மேலும், தமிழ்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் சிதம்பரம் நடராஜர் கோவில், பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு வந்து செல்வது வழக்கம். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தால் பராமறிக்கப்படும் இந்த சுற்றுலா மையத்தில் அரசின் தங்கும் விடுதியும், தனியார் தங்கும் விடுதிகளும் உள்ளது. இந்த விடுதிகள் அனைத்து விடுமுறை நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் நிரம்பி வழியும்.

சுற்றுலா வளர்ச்சி கழக தங்கும் விடுதியை சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு பணியாளர்கள் நேற்று ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த ஒரு அறையில் கைத்துப்பாக்கி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனைக் கண்டு பதறிப்போன ஊழியர்கள், அந்த அறையை விடடு தலைதெரிக்க ஓடிவந்தனர். இதனால் மற்ற அறைகளில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள், பதட்டமடைந்து சுற்றுலா கழக விடுதியை விட்டு வெளியில் வந்தனர். பின்னர் தகவலறிந்து தங்களின் அறைக்கு திரும்பி சென்றனர் இது குறித்து துப்புரவு பணியாளர்கள் சுற்றுலா கழக மேலாளர் பைசலிடம் தகவல் கூறினர். துப்புரவு ஊழியர்களுடன் தங்கும் அறைக்கு சென்று பார்வையிட்டார். அங்கிருந்த கைத்துப்பாக்கி ஏர்கண் என்பதை உறுதி செய்தார். இது தொடர்பாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமிற்கு தகவல் கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து கிள்ளை போலீசார் பிச்சாவரத்தில் உள்ள சுற்றுலா கழக தங்கும் விடுதிக்கு விரைந்து சென்ற னர். அங்கிருந்த அறையில் கிடந்த கைத்துப்பாக்கியை கைப்பற்றினர். மேலும், கடந்த 2 தினங்களாக இங்கு தங்கியிருந்தவர்களின் பட்டியலை பெற்றுக் கொண்டனர். அவர்களை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பிச்சாவரம் சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News