திண்டுக்கல் அண்ணாநகரில் மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கியதால் சுகாதார சீர்கேடு
- திண்டுக்கல்லில் கடந்த 1 வாரமாக பெய்த கனமழை காரணமாக இப்பகுதியில் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது.
- கடந்த 3 நாட்களாக இந்த சாலையை கடக்க முடியாமல் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அண்ணாநகர் பிரதானசாலை விவேகானந்தா நகரில் இருந்து ஜி.டி.என். சாலை, திருச்சி சாலை செல்லும் முக்கிய சந்திப்பாக இருந்து வருகிறது. தற்போது கரூர் சாலையில் சுரங்கப்பாதை பணிகள் நடந்து வருவதால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் இதனையே பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக எம்.எஸ்.பி., எஸ்.எம்.பி.எம் பள்ளிக்கு வரும் மாணவர்கள் இந்த சாலையின் வழியாக சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வருகின்றனர். திண்டுக்கல்லில் கடந்த 1 வாரமாக பெய்த கனமழை காரணமாக இப்பகுதியில் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது. தண்ணீர் செல்ல வழியில்லாததால் பாதாள சாக்கடை வழியாகவும் வெளியேற்ற முடியாமல் குளம்போல் தேங்கி நிற்கிறது.
இந்த தண்ணீரில் கழிவுநீரும் சேர்ந்து சுகாதார சீர்கேடான நிலையில் கொசுக்கள் உற்பத்தியாகும் மையமாக மாறியுள்ளது. கடந்த 3 நாட்களாக இந்த சாலையை கடக்க முடியாமல் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
மழை காலத்திற்கு முன்பாகவே கால்வாயில் ஏற்பட்ட அடைப்புகளை வெளியேஎடுத்து தண்ணீர் செல்ல மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வந்தது. ஆனால் அண்ணாநகரில் அதுபோன்ற எந்த பணிகளும் மேற்கொள்ளவில்லை. கழிவுநீர் மற்றும் மழைநீர் குளம்போல் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர்.
எனவே விரைந்து தண்ணீரை அகற்றி போக்குவரத்திற்கு சீரான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.