உள்ளூர் செய்திகள்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்: ஆய்வு மையம் தகவல்

Published On 2024-05-04 04:30 GMT   |   Update On 2024-05-04 04:30 GMT
  • தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
  • இயல்பை விட 7 டிகிரி செல்சியஸ் அதிகம்.

சென்னை:

தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

எல்-நினோ கால கட்டத்தில் மத்தியப் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வு, மண்ணின் ஈரப்பதம் குறைவு போன்ற காரணங்களால் நிகழாண்டில் தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ஈரோட்டில் 27 நாள்களும் பரமத்தி வேலூரில் 22 நாள்களும் வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகி உள்ளது. இது இயல்பை விட 7 டிகிரி செல்சியஸ் அதிகம்.

இந்தநிலையில், மே 7-ந்தேதி வரை தமிழக உள் மாவட்டங்களில் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரையும், வட தமிழகத்தில் 5 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பம் அதிகரிக்கும், மேலும், மே வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலைவீசும்.

பருவ காலம் போல் கோடை காலங்களில் மழை பெய்யாது. இதில் மார்ச் 1 முதல் மே 2 வரையிலான கால கட்டத்தில் இயல்பான மழை அளவு 50 மி.மீ. ஆகும். ஆனால், நிகழாண்டில் வெறும் 10 மி.மீ அளவுதான் மழைப்பொழிவு பதிவாகி யுள்ளது. இது இயல்பை விட 74 சதவீதம் குறைவு. பொதுவாக மே மாதம் என்பது வெயில் காலம் என்பதால் கோடை மழை வரும்போது வெயிலின் தாக்கம் சற்று குறையும்.

தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 9-ந்தேதி வரை காற்றுக் குவிதல் காரணமாக இடியுடன் கூடிய கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் நீலகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் மே 7-ந் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகரைப் பொருத்தவரை அடுத்த 2 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகும். சென்னையில் தற்போதைக்கு கோடை மழை பெய்ய வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News