உள்ளூர் செய்திகள் (District)

கனமழையில் 500 நெல் மூட்டைகள் நனைந்து சேதம்

Published On 2024-08-06 04:30 GMT   |   Update On 2024-08-06 04:52 GMT
  • மழையில் நனைந்த நெல்மணிகள் அனைத்தும் முளைக்கும் தருவாயில் உள்ளது.
  • நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுகிராமம், குடுமியான் குப்பம், அங்குசெட்டிப் பாளையம், சிறுவத்தூர், ஏரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் அதிகமாக பயிரிடப்படுகிறது. இந்த பகுதியில் அறுவடை செய்யப்படும் நெல் சேமக் கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் பண்ருட்டி பகுதியில் நள்ளிரவு வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக சேமக்கோட்டை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழை நீர் குளம் போல் தேங்கி விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 500 மூட்டை நெல்மணிகள் நனைந்து சேதம் அடைந்தது.

தற்போது மழையில் நனைந்த நெல்மணிகள் அனைத்தும் முளைக்கும் தருவாயில் உள்ளது. இதனைக் கண்டு செய்வதறியாமல் தவித்த விவசாயிகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் மழை நீரை வடிகட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு பகல் பாராமல் உழைத்து நெல்மணிகளை அறுவடை செய்து விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட இடத்தில் நனைந்து சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் பாதுகாப்பான இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News