மேட்டுப்பாளையத்தில் கனமழை: 2 ஆயிரம் வாழைகள் சேதம்
- இன்னும் ஓரிரு வாரங்களில் குலைதள்ளும் தருவாயில் இருந்தது
- சேதம் அடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக இரவு மற்றும் பகல் நேரங்களில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது.
காரமடை அடுத்த புங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பையன். இவர் தோட்டத்தில் வாழை மரங்களை பயிரிட்டு இருந்தார். இந்த நிலையில் அங்கு நேற்று சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதில் அங்கு நின்ற 350 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன. இதேபோல் சிறுமுகை, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளிலும் 1500-க்கும் மேற்பட்ட வாழைகள் சேதம் அடைந்து உள்ளன.
இன்னும் ஓரிரு வாரங்களில் குலைதள்ளும் தருவாயில் இருந்த வாழை மரங்கள் காற்றில் முறிந்து சேதம் அடைந்தது விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே அரசு அதிகாரிகள் உடனடியாக களஆய்வு நடத்தி, சேதம் அடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.