உள்ளூர் செய்திகள் (District)

வால்பாறையில் கொட்டி தீர்த்த கனமழை- பள்ளிகளுக்கு விடுமுறை

Published On 2024-06-20 04:54 GMT   |   Update On 2024-06-20 04:54 GMT
  • வால்பாறையில் உள்ள முக்கிய சாலைகள், எஸ்டேட் பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
  • கூழாங்கல் ஆறு உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வால்பாறை:

கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று காலை மிதமான வெயில் காணப்பட்டது.

மதியத்திற்கு பிறகு வெயில் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவில் கனமழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.

இந்த மழைக்கு வால்பாறையில் உள்ள முக்கிய சாலைகள், எஸ்டேட் பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

தாழ்வான இடங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது. இன்று காலையும் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் காலையில் வேலைக்கு செல்வோர், தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்பவர்களும் மிகவும் சிரமப்பட்டனர். மழை காரணமாக, வால்பாறையில் உள்ள ஆறுகளுக்கு நீர்வரத்தும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கூழாங்கல் ஆறு உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கொட்டி தீர்த்த கனமழையால் வால்பாறை பகுதியில் மிதமான காலநிலை நிலவி வருகிறது. மழை பெய்ததால் கடும் குளிரும் காணப்படுவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News