உள்ளூர் செய்திகள்

கனமழை: மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

Published On 2024-08-12 08:26 GMT   |   Update On 2024-08-12 08:26 GMT
  • கனமழையால் சில பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
  • சாலையில் மிகப்பெரிய மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெரும்பாறை:

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்து வந்த கனமழை பகல் நேரத்திலும் பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. நேற்று சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழையால் அண்ணாசாலை, மூஞ்சிக்கல், ஏரிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. அதன் பிறகு விட்டு விட்டு சாரல் மழையாக பெய்து வந்த நிலையில் இன்று காலை ஏரிச்சாலையில் மிகப்பெரிய மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து தடைபட்டது.

இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து அந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மழை கிராமங்களில் பெய்த கனமழையால் பல இடங்களில் மின் வினியோகம் தடைபட்டது.


கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பெரும்பாறை, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, கே.சி.பட்டி, பாச்சலூர், பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. மேலும் பலத்த காற்றும் சுழன்று அடித்தது. இந்த நிலையில் நேற்று இரவு பெரும்பாறை பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் பெரும்பாறை-தாண்டிக்குடி மலைச்சாலையில் உள்ள மூலக்கடை-கொங்கப்பட்டி இடையே இன்று அதிகாலை சுமார் 2 மணிக்கு சாலையின் குறுக்கே மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் சாலையின் இருபுறமும் பஸ், லாரி, கார் போன்ற வாகனங்கள் செல்ல முடியாமல் அணி வகுத்து நின்றது.

இது குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பரத், மாவட்ட தி.மு.க. விவசாய தொழிலாளர் துணை அமைப்பாளர்கள் மகாராஜன், ஜெயராஜ் ஆகியோர் தலைமையில் 2 அறுவை எந்திரத்தின் மூலம் மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர். இதனால் 4 மணி நேரத்துக்கு பிறகு மலைச்சாலையில் போக்குவரத்து சீரானது. இதேபோல் நேற்று மாலை தடியன்குடிசையில் வேரோடு மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த கொடைக்கானல் நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் மாசிலாமணி மற்றும் பணியாளர்கள் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் அறுவை எந்திரத்தின் மூலம் மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர். இதனால் 2 மணி நேரத்துக்கு பிறகு மலைச்சாலையில் போக்குவரத்து சீரானது.

Tags:    

Similar News