கடலூரில் கனமழை : கெடிலம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மண் பாதை: குடிநீர் குழாய் அமைக்கும் பணி பாதிப்பு
- .கடலூரில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த தொடர் கனமழையால் கெடிலம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது
- கடலூர் நகரின் முக்கிய சின்னமாக இருந்து வந்த இரும்பு மேம்பாலத்தை அதிகாரிகள் இடித்து தகர்த்தனர்
கடலூர்:
கடலூரின் முக்கிய பாலமாக அண்ணா மேம்பாலம் உள்ளது. இது கடலூர் நகரின் இணைப்பு மேம்பாலமாக இருந்து வருவதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் 24 மணி நேரமும் சென்று வருகின்றது. இங்கு ஆங்கிலேயர் காலத்தில் இரும்பு மேம்பாலம் அமைக்கப்பட்டு இருந்த நிலையில் நாளடைவில் அதன் பயன்பாடு முழுவதும் குறைந்து வந்தது. இந்தநிலையில், மாநகராட்சிக்கு ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரும் குழாய், இரும்பு மேம்பாலம் வழியாக அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், இந்த இரும்பு பாலத்தை சரியான முறையில் பராமரித்து வராத காரணத்தினால் இடிந்து விழுந்தது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள், கடலூர் நகரின் முக்கிய சின்னமாக இருந்து வந்த இரும்பு மேம்பாலத்தை இடித்து தகர்த்தனர்.இந்த பாலத்தின் வழியாக தான் கடலூர் நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யும் ராட்சத குழாய்களும், பாதாள சாக்கடை குழாய்களும் செல்கின்றன. தற்போது புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
ராட்சத குடிநீர் குழாய்களையும், பாதாள சாக்கடை குழாய்களையும் வேறு வழியாக மாற்றி அமைக்கும் வகையில் சிறிய பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக மாநகராட்சி சார்பில் ஆற்றின் குறுக்கே மண் பாதை அமைக்கப்பட்டு, அதன் மூலம் பணியாளர்கள் சென்று குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் கடலூரில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த தொடர் கனமழையால் கெடிலம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக குழாய் அமைப்பதற்காக அமைக்கப்பட்ட பாதை அந்த நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் குழாய் அமைக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அந்தப் பாதையை விரைந்து சீரமைத்து, குடிநீர் குழாய் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.