பண்ருட்டியில் கனமழை: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி
- இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விழுந்து எழுந்து செல்லும் காட்சி பரிதாபமாக உள்ளது.
- பண்ருட்டில் உள்ள அனைத்து திருமண நிலையங்களிலும் திருமணம் நடந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் சுற்றுப்புற வட்டார கிராமங்களில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர் ஹெட்லைட்களை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றனர். பண்ருட்டி - கடலூர் ரோடு, சென்னை ரோடு, கும்பகோணம் ரோடு, காந்தி ரோடு, ராஜாஜி ரோடு ஆகிய ரோடுகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பண்ருட்டி-சென்னை ரோட்டில் கண்டரக்கோட்டை வரையிலும், பண்ருட்டி-கும்பகோணம் ரோட்டில் கொள்ளுக்காரன் குட்டை வரையிலும் குண்டும் குழியுமான சாலையில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாகி உள்ளது.
எல்.என்.புரம், கும்பகோணம் ரோடு ரவுண்டானா பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விழுந்து எழுந்து செல்லும் காட்சி பரிதாபமாக உள்ளது. மேலும், இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் பண்ருட்டில் உள்ள அனைத்து திருமண நிலையங்களிலும் திருமணம் நடந்தது. இதில் கலந்து கொள்ள வெளியூரில் டூவீலரில் வந்த உறவினர்கள் கடும் அவதிக்குள்ளாயினர். நகரில் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் கொட்டும் மழையி லும் அதிகாரிகள் ஊழிய ர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.