உள்ளூர் செய்திகள்

அணைப்பிள்ளையார் நீர் வீழ்ச்சியில் தடுப்புகளை தாண்டி தண்ணீர் செல்லும் காட்சி.

தேனி மாவட்டத்தில் கன மழை : பெரியாறு, வைகை அணைகளின் நீர்மட்டம் கிடு கிடு உயர்வு -அருவிகளில் வெள்ளப்பெருக்கு

Published On 2023-11-04 05:21 GMT   |   Update On 2023-11-04 05:21 GMT
  • கனமழையால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான கொட்டக்குடி, பீச்சாங்கரை, குரங்கணி, உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் பெய்த கன மழையால் கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.
  • கும்பக்கரை அருவியிலும் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. அருவியில் குளிக்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது.

கூடலூர்:

தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் தற்போது கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று மாலை தொடங்கிய சாரல் மழை பின்னர் படிப்படியாக அதிகரித்து இரவில் கன மழையாக கொட்டி தீர்த்தது. பல இடங்களில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான கொட்டக்குடி, பீச்சாங்கரை, குரங்கணி, உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் பெய்த கன மழையால் கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணைப்பிள்ளையார் நீர் வீழ்ச்சியில் தடுப்புகளை தாண்டி தண்ணீர் செல்கிறது. பொதுமக்கள் அங்கு செல்லவோ, கால்நடைகளை அழைத்து செல்லவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சிறுவர்கள் அங்கு செல்வதை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல் பெரியகுளம் அருகில் உள்ள கும்பக்கரை அருவியிலும் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. இதனையடுத்து அருவியில் குளிக்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது.

தொடர் மழை காரணமாக ஏற்கனவே மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகள் முழு கொள்ளளவை எட்டி அதில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல் முல்லைப்பெரியாறு மற்றும் வைகை அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 125.05 அடியாக உள்ளது. வரத்து 1565 கன அடி. திறப்பு 511 கனஅடி. இருப்பு 3629 மி.கன அடி.

71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 65.12 அடியாக உள்ளது. வரத்து 885 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 4658 மி.கன அடி.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 51.50 அடி. வரத்து மற்றும் திறப்பு 100 கன அடி. இருப்பு 366 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.60 அடி. அணைக்கு வரும் 129 கனஅடி முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடி.

பெரியாறு 27.4, தேக்கடி 11.2, கூடலூர் 5.4, உத்தமபாளையம் 11.4, சண்முகாநதி அணை 6.6. போடி 5.8, வைகை அணை 30, மஞ்சளாறு 42, சோத்துப்பாறை 46, பெரியகுளம் 25, வீரபாண்டி 22.6, அரண்மனைப்புதூர் 6, ஆண்டிபட்டி 34.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News