உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை தொடர உயர்நீதிமன்றம் உத்தரவு

Published On 2024-10-02 04:46 GMT   |   Update On 2024-10-02 04:46 GMT
  • வாகனங்கள் இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.
  • சுற்றுலாப் பயணிகள் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல்

ஊட்டி:

சர்வதேச சுற்றுலா தலமான நீலகிரிக்கு ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக சுற்றுலாப் பயணிகள் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் தங்குமிடம், கழிப்பறை உள்பட பல்வேறு அடிப்படை விஷயங்களும் சுற்றுலாப் பயணிகளுக்கு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

இதனால் சுற்றுலாப் பயணிகள் அனைத்து சுற்றுலா தலங்களையும் பார்க்க முடியாமல் அதிருப்தி அடைகின்றனர். உள்ளூர் மக்களும் சரியான நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் நீலகிரியில் சுற்றுலாப் பயணிகள் வருகையில் கட்டுப்பாடுகளை கொண்டு வருவதற்காக முதல்கட்டமாக இ-பாஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இதன்படி கடந்த மே மாதம் 7-ந்தேதி முதல் நீலகிரிக்குள் வரும் வாகனங்கள் இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ளது. இதற்காக https:/;/epass.tnega.org என்ற பிரத்யேக இணையதளம் வெளியிடப்பட்டு அதன்மூலம் இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் கடந்த செப்டம்பர் 30-ந்தேதிவரை இ-பாஸ் எடுத்து வர கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து தற்போது மறுஅறிவிப்பு வரும்வரை நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை தொடர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் லட்சுமிபவ்யா தண்ணீரு கூறுகையில், நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் மறுஅறிவிப்பு வரும்வரை இ-பாஸ் நடைமுறை தொடரும்.

இ-பாஸ் நடைமுறைப் படுத்தப்பட்டதில் இருந்து கடந்த 5 மாதங்களில் மட்டும் 2 3/4 லட்சம் வாகனங்களில் 13 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News