பாவூர்சத்திரம் அருகே தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின் வயர்களை மாற்ற வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை
- நான்கு வழிச்சாலையின் ஓரம் நெடுஞ்சாலை துறை சார்பில் கழிவு நீர் மழை நீர் செல்வதற்காக மூடப்பட்ட நிலையில் வாறுகால் அமைக்கப்பட்டுள்ளது.
- கல்லூரி, பள்ளி பஸ்கள் மற்றும் மார்க்கெட் செல்லும் லாரிகள் செல்வதால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
தென்காசி:
நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பாவூர்சத்திரம் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் மேல் புறம் இருந்து பாவூர்சத்திரம் மார்க்கெட் சாலை வரை செல்லும் பகுதியில் நான்கு வழிச்சாலையின் ஓரம் நெடுஞ்சாலை துறை சார்பில் கழிவு நீர் மழை நீர் செல்வதற்காக மூடப்பட்ட நிலையில் வாறுகால் அமைக்கப்பட்டுள்ளது.
அதன் அருகே மிகவும் தாழ்வாக உயர் அழுத்த மின் வயர்கள் சென்று கொண்டு உள்ளன. நடந்து செல்லும் நபரின் தலை தட்டும் அளவிற்கு செல்வதால் உடனடியாக அதனை சம்பந்தப்பட்ட மின்சார வாரியத்தினர் சரி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் அவ்வழியே அதிகளவில் கனரக வாகனங்களான கல்லூரி, பள்ளி பேருந்துகள் மற்றும் மார்க்கெட் செல்லும் லாரிகள் செல்வதால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த தாழ்வாக செல்லும் மின் ஒயர்களை உடனடியாக மாற்றி அமைப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு அப்பகுதியினர் இடையே எழுந்துள்ளது.