திண்டுக்கல்லில் கொசு புழுக்கள் கண்டறியப்பட்டால் வீட்டு உரிமையாளர்களுக்கு அபராதம்- கமிஷனர் எச்சரிக்கை
- திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கை முகாம் நடைபெற்றது.
- வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் கொசு புழுக்களை உற்பத்தியாகும் வண்ணம் வைத்திருந்தால் உரிமையாளர் களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டி கென்னடி நினைவு தொடக்கப்பள்ளியில் மாநகராட்சி சார்பில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கை முகாம் நடைபெற்றது. இதில் கமிஷனர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
டெங்கு இல்லாத நகரமாக திண்டுக்கல் மாநகரம் இருக்க வேண்டும். இதற்கு சுகாதார ஆய்வாளர்கள், களப்பணியாளர்கள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். வீடு வீடாக சென்று கொசு புழுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டுபிடித்து, மருந்து ஊற்றி அழிக்க வேண்டும்.
தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க அறிவுறுத்த வேண்டும். தொடர்ந்து வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் கொசு புழுக்களை உற்பத்தியாகும் வண்ணம் வைத்திருந்தால் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். முறையாக பணியில் ஈடுபடாத களப்பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கொசு உற்பத்தியை தடுக்க சுகாதார ஆய்வாளர்கள் முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும். கொரோனாவை போல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் அனைவரும் தீவிரம் காட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.
இதில் சுகாதார இணை இயக்குநர் வரதராஜன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ பணியாளர்கள், மருத்துவ அலுவலர்கள், பரப்புரையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.