தமிழகம் முழுவதும் சென்று கட்சியை வலுப்படுத்த உள்ளேன்- ஜி.கே.வாசன் எம்.பி
- காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாமல் இருப்பது வேதனைக்குரியது.
- தீபாவளிக்கு பிறகு மண்டல கூட்டங்கள் நடத்தப்படும்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் த.மா.கா. மூத்த தலைவர் தெட்சிணாமூர்த்தி உடல் நலக்குறைவால் இறந்தார். அவரது வீட்டுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி சென்று குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன்.
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாமல் இருப்பது வேதனைக்குரியது.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகளை வீழ்த்த அ.தி.மு.க.-பா.ஜனதா உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதுவே எனது விருப்பம்.
தீபாவளிக்கு பிறகு மண்டல கூட்டங்கள் நடத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கட்சியை வலுப்படுத்த உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது த.மா.கா. மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ் மூப்பனார், நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ தஞ்சை மாவட்ட தலைவர் ரங்கராஜன், திருவாரூர் மாவட்ட தலைவர் தினகரன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் காமராஜ், மாவட்ட துணை செயலாளர் ஜீவானந்தம், வட்டார தலைவர்கள் காந்தி நாராயணன், சாமிதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர், ஜி.கே.வாசன் எம்.பி, ஜாம்புவானோடை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு புகுந்து கொள்ளையடிக்க வந்தவர்களை அரிவாளால் விரட்டிய முதியவர் வைரகண்ணுவை நேரில் சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.