மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியதால்தான் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றேன்- முன்னாள் அமைச்சர் பேட்டி
- விஷ சாராயம் குடித்து பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது.
- வெடி விபத்தின்போது உயிரிழந்தவர்களுக்கு நிவாரணமாக ரூ.2 லட்சம் வழங்கி இருக்கிறார்கள்.
மன்னார்குடி:
முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ., மன்னார்குடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் சாராய சாம்ராஜ்யம் கொடிகட்டி பறப்பது காவல்துறையினரின் தற்போதைய சாராயம் பறிமுதல் மற்றும் கைது நடவடிக்கையில் இருந்து தெரிய வருகிறது.
காவல்துறையின் முறையான நடவடிக்கை இல்லாத காரணத்தினால் தான் விஷசாராயம் அருந்தி இவ்வளவு பேர் உயிரிழந்து உள்ளனர்.
விஷ சாராயம் குடித்து பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது.
அதே நேரத்தில் சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் நிகழ்ந்த வெடி விபத்தின்போது உயிரிழந்தவர்களுக்கு நிவாரணமாக ரூ.2 லட்சம் வழங்கி இருக்கிறார்கள்.
இது ஒரு தவறான முன்னுதாரணம்.
ஸ்ரீரங்கத்தில் பாடசாலையில் படித்த மன்னார்குடியை சேர்ந்த 2 மாணவர்கள் உள்ளிட்ட 3 இளம் மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
அவர்களுக்கு எந்த ஒரு நிவாரணமும் அரசின் சார்பில் அறிவிக்கப்படாதது வருத்தத்தையும், வேதனையும் அளிக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
நான் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியதால்தான் தொடர்ந்து 3 முறை நன்னிலம் பகுதியில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வருகிறேன்.
எந்த தொகுதியிலும் நின்று ஜெயிக்கக்கூடிய தெம்பு உள்ளவன் நான்.
பொதுச்செ யலாளர் எடப்பாடி பழனிசாமி சொன்னது போல் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன் கூட்டு என்பது ஜீரோவுடன் ஜீரோ சேர்ந்தால் ஜீரோ என்பதுதான்.இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சிவா.ராஜமாணிக்கம், மன்னார்குடி ஒன்றியக்குழு தலைவர் மனோகரன், ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வம், நகர செயலாளர் ஆர்.ஜி.குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.