ஒன்றிணைந்து செயல்பட்டால் தேயிலை விற்பனையில் அதிக லாபம் பெறலாம்- அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சு
- நீலகிரியில் 60 சதவீத சிறுதேயிலை விவசாயிகள் உள்ளனர்.
- தரம் குறைந்த தேயிலை, தவறான குறியீடு உள்பட 32 வழக்குகள் பதிவாகியுள்ளன.
குன்னூர்,
நீலகிரி மாவட்டம் குன்னூர் உப்பாசி கூட்டரங்கில் தேயிலை வாரியம் சார்பில் விவசாயிகள், விற்பனையாளர்கள் மற்றும் ஆலை நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம், தமிழக சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது.
இதில் அதிகாரிகள் தரப்பில் தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் முத்துக்குமார், மாவட்ட கலெக்டர் அம்ரித், இண்கோ சர்வ் முதன்மை செயல் அதிகாரி மோனிக்காராணா, நீலகிரி தேயிலை சங்கங்கள் சார்பில் நெலிகொலு சிறுவிவசாயிகள் மேம்பாட்டு சங்கம், மலை மாவட்ட விவசாயிகள் சங்கம், சிறுதேயிலை விவசாயிகள் சங்கம், தேயிலை உற்பத்தியாளர் சங்கம், நீலகிரி தேயிலை உற்பத்தியாளர் சங்கம், நீலகிரி வயநாடு சங்கம், தேயிலை தரகர்- ஏற்றுமதியாளர்கள் சங்கம் உள்பட பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவிலேயே சிறுதேயிலை விவசாயிகள் அதிகம் உள்ள மாவட்டம் நீலகிரி. இங்கு 60 சதவீதம் சிறுதேயிலை விவசாயிகள் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலை விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் தேயிலை விற்பனை சந்தையில் சிறப்பாக செயல்பட்டு சிறந்த தரத்துடன் அதிக லாபம் பெற முடியும். நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா, தேயிலை ஆகிய இரண்டும் கண்கள் ஆகும்.
எனவே அங்கு இதுவரை இல்லாத அளவில் ரூ.150 கோடி மதிப்பில் சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதன்மூலம் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சி மேம்படும். பொதுமக்களின் வாழ்வாதாரமும் உயரும். நீலகிரியில் கலப்பட தேயிலைத்தூள் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடப்பாண்டில் பல்வேறு பகுதிகளில் அதிரடியாக ஆய்வு நடத்தி உள்ளனர். இந்த வகையில் 11 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 6 வழக்குகளில் தொடர்பு உடையவர்களுக்கு ரூ.1.62 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
இதுதவிர தரம் குறைந்த தேயிலை, தவறான குறியீடு உள்பட 32 வழக்குகள் பதிவாகி, அதில் 16 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.52,500 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கலப்பட தேயிலை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சாரிபில் தேயிலை வியாபா ரிகளின் கோரிக்கைகள் அனைத்துக்கும் தீர்வு காணப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.