கடலூர் துறைமுகத்தில் ஐ.ஐ.டி. அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்ய பரிந்துரை: உறுதிமொழிக் குழு தலைவர் உறுதி
- மீன்கள் மீன்பிடி த்தளத்திற்கு கொண்டு வர முடியாமல் மீனவர்கள் தவித்து வருகின்றனர்.
- சரியான முறையில் பணிகள் நடைபெறவில்லை என மீனவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
கடலூர்:
தமிழ்நாடு சட்ட பேரவையின் உறுதிமொழிக் குழுத் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் மோகன், ராமலிங்கம், வில்வநாதன், சக்கரபாணி, அருள் ஆகியோர் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்தனர். இக்குழுவினர் கடலூர் எம்.எல்.ஏ., அய்யப்பனுடன் சென்று கடலூர் துறைமு கத்தில் நடைபெறும், தூர்வாரும் பணி, பராமரிப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அய்யப்பன் எம்.எல்.ஏ., கூறுகையில், கடந்த 2006 - 2007 ஆம் ஆண்டு வைத்த கோரிக்கை மற்றும் தற்போது நடைபெற்ற சட்டமன்றத்தில் துறைமுகம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வியின் அடிப்படையில் இக்குழு துறைமுகத்தை ஆய்வு செய்து உள்ளனர். துறைமுகத்தில் நடைபெற்ற பணியில் மோசடி செய்திருந்தால் அதற்குரிய தண்டனை வாங்கி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையும், துறைமுக வளர்ச்சிக்காக கூடுதல் நிதியை குழு தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. மற்றும் உறுப்பினர்கள் பெற்று தருவார்கள் என பேசினார்.
இதனை தொடர்ந்து மீனவர் வாழ்வுரிமை இயக்க சார்பில் ஆய்வுக்குழுவிடனம் மனு அளித்தனர். அந்த மனுவில், கடலூர் துறைமுகம் 135 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு தூர்வாரப்பட்டு உள்ளது. ஆனால் துறைமுகத்தில் ஒரு பகுதியில் ஆழப்படுத்தியும், மற்றொரு பகுதியில் ஆழப்படுத்தாத நிலை உள்ளது. இதனால் கடலில் பிடிக்க ப்பட்ட மீன்கள் மீன்பிடி த்தளத்திற்கு கொண்டு வர முடியாமல் மீனவர்கள் தவித்து வருகின்றனர். இது சம்பந்தமாக உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆய்வுக்குழு தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ கூறுகையில், கடலூர் துறைமுகத்தை ஆய்வு செய்வதற்கு முக்கிய காரணம் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய அய்யப்பன் எம்.எல்.ஏ.தான். கடலூர் துறைமுகத்தில் சரியான முறையில் பணிகள் நடைபெறவில்லை என மீனவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இது குறித்து கடலூர் கலெக்டர் தலைமையில் சென்னை ஐ.ஐ.டி. அதிகாரிகள் குழுவை அமைத்து உரிய ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்தார். அப்போது கலெக்டர் அருண் தம்புராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.