உள்ளூர் செய்திகள்

விமான சேவையில்கோவை விமான நிலையம் 13-வது இடத்தை பிடித்தது

Published On 2023-01-13 09:50 GMT   |   Update On 2023-01-13 09:50 GMT
  • ஜப்பானின் ஒசாகா சர்வதேச விமான நிலையம் 91.45 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.
  • பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருந்தது.

கோவை,

கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், ஷார்ஜா ஆகிய வெளிநாடுகளுக்கும், சென்னை, ஐதராபாத், மும்பை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட உள்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், விமான போக்குவரத்தை ஆய்வு செய்யும் வெளிநாட்டைச் சேர்ந்த தனியார் ஏஜென்சி சார்பில் சமீபத்தில் சர்வதேச அளவில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.

கடந்தாண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் நடந்த விமான போக்குவரத்தை மையமாக வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. விமான நிலையங்களுக்கு விமானங்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு வருவது, புறப்பட்டுச் செல்வது, பயணிகள் சேவை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருந்தது.

இந்த ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதில், சர்வதேச அளவில் சரியான நேரத்துக்கு விமானங்களை இயக்கும் உலகின் முதன்மையான 20 விமான நிலையங்களுக்கான பட்டியலில், கோவை விமான நிலையம் 13-வது இடத்தை பிடித்துள்ளது.

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால் இயக்கப்படும் இந்த விமான நிலையம், 88.01 சதவீதத்துடன் 13-வது இடத்தைப் பிடித்துள்ளது மற்றும் சேவை ரத்து 0.54 சதவீதம் மட்டுமே. இந்த பட்டியலில் ஜப்பானின் ஒசாகா சர்வதேச விமான நிலையம் 91.45 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.

Tags:    

Similar News