கடலூர் அருகே இன்று காலை விபத்து அரசு பஸ் மீது மோதி தனியார் பள்ளி பஸ் கண்ணாடி உடைந்தது
- சாரல் மழை பெய்ததால் அரசு பஸ் டிரைவர் பிரேக் போட்டுள்ளார்.
- தனியார் பஸ்சின் கண்ணாடி உடைந்தது. அரசு பஸ்சின் பின் பகுதி சேதம் அடைந்தது.
கடலூர்:
கடலூர் பஸ் நிலையத்திலிருந்து இன்று காலை நெல்லிக்குப்பம் நோக்கி அரசு பஸ் பயணிகளை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தது. கடலூர் அருகே கோண்டூர் பகுதி பஸ் நிறுத்தத்தில் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். இதனையடுத்து பஸ்சில் பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டு அரசு பஸ் சென்றது. அப்போது பஸ்சின் பின்னால் தனியார் பள்ளி பஸ் ஒன்று மாணவிகளை ஏற்றி வருவதற்காக கடலூரில் இருந்து நெல்லிக்குப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று காலையிலிருந்து கடலூரில் சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது. இதனால் சாலையில் சென்ற அரசு பஸ் டிரைவர் பிரேக் போட்டுள்ளார். உடனே பஸ்சின் பின்னால் வந்த தனியார் பள்ளி பஸ் முன்னால் சென்ற அரசு பஸ் மீது வேகமாக மோதியது. இதில் தனியார் பஸ்சின் கண்ணாடி உடைந்தது. அரசு பஸ்சின் பின் பகுதி சேதம் அடைந்தது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அலறினர். உடனடியாக பஸ்சில் இருந்து பயணிகள் அனைவரும் வேகவேகமாக கீழ் இறங்கினர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அங்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் எந்த வித காயம் இன்றி தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பயணிகளை மாற்று பஸ்சில் அவர்கள் செல்லும் இடங்களுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை அரசு பஸ் மீது மோதி தனியார் பள்ளி பஸ் உடைந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.