அன்னூரில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் நால்ரோடு சாலை
- சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
- நடந்து செல்லும் பாதசாரிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அன்னூர்
அன்னூர் பஸ் நிலையம் அருகே 2 நால்ரோடுகள் உள்ளன. இந்த சாலையானது கோவை, திருப்பூர், மேட்டுப் பாளையம், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது.
தினமும் இந்த சாலையின் வழியாக 2 மற்றும் 4 சக்கரம், கனரக வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. இதனால் தினசரி இந்த சாலையின் மார்கமாக சென்று வரும் வாகனங்கள் எண்ணிக்கை குறைந்தபட்சம் 5 ஆயிரத்தை கடக்கும். ஆனால் இந்த சாலை கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் தவிழ்ந்து தவிழ்ந்து வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் வருவோர் இந்த குழிகளின் மூலம் வரும் புழுதியில் சிக்கி கீழே விழும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இது மட்டுமல்லாமல் இந்த சாலை வழியாக நடந்து செல்லும் பாதசாரிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் இதே பகுதியில் காவல்துறையினருக்கு முறையாக நிழற்குடை இல்லாததாலும், வாகனங்களை திசை திருப்பி விடுவதற்கு பல்வேறு சிரமங்கள் நிலவி வருகின்றன. எனவே இந்த இரு இடங்களில் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைத்து வாகனங்களை திட்டமிட்டபடி வழி பிரித்து அனுப்ப சிக்னல் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மட்டும் இல்லாமல் சமூக நல ஆர்வலர்களும் வலியுறுத்தி உள்ளனர்.