இலக்கியம்பட்டி அரசு பெண்கள் பள்ளி முன்பு பள்ளி மேலாண்மை குழுவின் தலைமையில் மாணவிகளின் பெற்றோர்கள் போராட்டம்
- அடிப்படை வசதிகள் இல்லை என்று புகார் கூறினர்.
- தருமபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தருமபுரி,
தருமபுரியை அடுத்துள்ள இலக்கியம்பட்டியில் அரசு பெண்கள் உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு சுமார் 385 மாணவிகள் படித்து வருகின்றனர்.
இன்று காலை பள்ளி முன்பு பள்ளி மேலாண்மை குழுவினர் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் கிருஷ்ணம்மாள் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் மாணவிகளுக்கு கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் எந்திரம் பராமரிப்பின்றி உள்ளது. கூடுதல் வகுப்பு கட்டிடம் கட்டப்பட்டும் திறக்கப்படாமல் உள்ளது.
தலைமை ஆசிரியை உள்பட 19 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களில் 7 ஆசிரியர்கள் தொடர்ந்து மருத்துவ விடுப்பில் உள்ளதால் கல்வி கற்பித்தல் பாதிக்கப்படுகிறது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை குறித்து பேசினர்.
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தருமபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கிளம்பி சென்று கலெக்டர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கை மனுவை கொடுத்தனர்.