வேப்பூர் அருகே கீரம்பூரில் கோவில் உண்டியல் உடைத்து நகை, பணம் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை
- கீரம்பூர் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான மரங்கள் ரூ.20 ஆயிரம் வருவாயாக ஏலம் விடப்பட்டது. இந்த பணத்தை ஊர் பொது மக்கள் கோவில் உண்டியலில் போட்டு வைத்தனர்.
- இன்று காலை கோயில் பூசாரி வந்து பார்த்தபோது, கோவிலின் பூட்டு திறக்கப்பட்டு உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பூசாரி, ஊர் மக்களுக்கு தகவல் கொடுத்தார்.
கடலூர்:
வேப்பூர் திருபாக்கம் அருகே உள்ள கீரம்பூர் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான மரங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஏலம் விடப்பட்டது. இதில் ரூ.20 ஆயிரம் வருவாயாக கோவிலுக்கு கிடைத்தது. இந்த பணத்தை ஊர் பொது மக்கள் கோவில் உண்டியலில் போட்டு வைத்தனர் இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல கோவிலில் பூஜைகள் செய்து வீட்டு, கோவிலை பூட்டி விட்டு பூசாரி வீட்டிற்கு சென்றார். இன்று காலை வந்து பார்த்தபோது ,கோவிலின் பூட்டு திறக்கப்பட்டு உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பூசாரி, ஊர் மக்களுக்கு தகவல் கொடுத்தார். ஊர் பொதுமக்கள் இது குறித்து வேப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கோவில் உண்டியலில் இருந்த சுமார் ரூ.40 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டதும், அம்மன் கழுத்தில் இருந்த 3 கிராம் தங்க நகையும் கொள்ளையடிக்கப்பட்டதும் போலீசாருக்கு தெரிய வந்தது. இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கோவிலில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.