உள்ளூர் செய்திகள்

பெரும்பாலை பஞ்சாயத்தில் 100 நாள் வேலை திட்ட பெண் பணியாளர்கள் போராட்டம்

Published On 2022-06-24 10:10 GMT   |   Update On 2022-06-24 10:10 GMT
  • ஊராட்சி மன்ற தலைவியிடம் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
  • 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் எங்களுக்கு வருடத்திற்கு 10 முதல் 15நாட்கள் மட்டுமே வேலை கொடுக்கின்றனர்.

பெரும்பாலை.

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்து உள்ள பெரும்பாலை பஞ்சாயத்தில் மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக 100நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 100 நாள் வேலை பொதுமக்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே வழங்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதனை தொடர்ந்து பெரும்பாலை பஞ்சாயத்தில் பல்வேறு கிராம பகுதியை சேர்ந்த பெண்களுக்கு முறையாக 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கப்படவில்லை என சோளிகவுண்டனூர் பகுதியில் உள்ள ஏரியில் அப்பகுதி கிராமங்களை சேர்ந்த பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு பணியை புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவியிடம் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை சமாதானம் செய்வதற்காக அதிகாரிகள் முயற்சித்தும் முடியவில்லை. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் அதிகாரிகள் அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி பெண்களிடம் கேட்கும் போது 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் எங்களுக்கு வருடத்திற்கு 10 முதல் 15நாட்கள் மட்டுமே வேலை கொடுக்கின்றனர்.

அப்படி செய்கின்ற வேலைக்கும் பணம் முழுவதுமாக கிடைப்பதில்லை. இங்கு வேலை செய்யும் பணிக்குழு தலைவர் சரியாக வேலை இடத்திற்கு வருவதில்லை வேலைக்கு வராதாநபர்களுக்கு வந்த மாதிரி வருகை பதிவேட்டில் கணக்கு வைப்பது போன்ற முறைகேடான வேலைகளை செய்து வருகின்றனர்,

மத்திய மாநில அரசுகள் வழங்கும் நிதி மற்றும் திட்டங்கள் கிராம பகுதியில் உள்ள மக்களுக்கு முழுமையாக சென்றடைவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் 100 நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசும் 150 நாளாக அதிகரிப்பதற்காக தெரிவித்துவரும் நிலையில் 100 நாள் வேலைக்கே முழுமையாக வேலை வழங்காமல் ஏழு நாள் மட்டும் வழங்கி ஏமாற்றி வருவது அப்பகுதி பெண்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அப்பகுதி பெண்கள் புதிய பணிக்குழு தலைவரை மாற்றும் வரை வேலை செய்யமாட்டோம் என்று வேலையை புறக்கணித்து விட்டனர்.

Similar News