பாலக்கோட்டில் முறையாக இயக்கப்படாத நகர பேருந்துகளால் ஊழியர்கள், மாணவர்கள் தவிப்பு
- 20 எண் கொண்ட நகரப் பேருந்து சரி வர இயக்கப்படவில்லை.
- தனியார் ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு போக்குவரத்து பணிமனையில் இருந்து தினந்தோறும் நகர மற்றும் புறநகர் பேருந்துகள் என சுமார் 50-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
நகர பேருந்துகளில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் வேலைக்காக பயணித்து வருகின்றனர்.
பாலக்கோட்டிலிருந்து வெள்ளிச்சந்தை, அனுமந்தபுரம், காரிமங்கலம், திப்பம்பட்டி கூட்ரோடு வரை இயக்கப்படும் 20 எண் கொண்ட நகரப் பேருந்து சரி வர இயக்கப்படாததால் பயணிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இவ்வழியாக நாள் ஒன்றுக்கு 3 முறை இயக்கப்படும் நகர பேருந்து ஒருமுறை மட்டுமே இயக்கப்படுவதால் அவ்வழியே செல்லும் அரசு, தனியார் ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
திப்பம்பட்டி கூட்டுரோடு முதல் காரிமங்கலம், அனுமந்தபுரம், வெள்ளிச்சந்தை வழியாக பாலக்கோட்டிற்கு இரவு நேரத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் பெரும்பாலும் 20 எண் கொண்ட நகரப் பேருந்தை நம்பி ஊழியர்கள் இருந்து வருகின்றனர்.
மேலும் பேருந்துகள் முறையாக இயக்கப்படாமல் உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு முறையாக பேருந்து இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.