தஞ்சையில், குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை தொடக்கம்- கலெக்டர் தகவல்
- இதற்கான கல்வி தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தேர்வுக்கு தயார் செய்யும் விதம் தேர்வுக்கான பாட குறிப்புகள், தேர்வில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டகலெ க்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-1 தேர்வின் வாயிலாக 92 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிகவரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்கான கல்வி தகுதி ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த தேர்வு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி நடக்கிறது. தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை (வியாழக்கிழமை ) காலை 10:30 மணிக்கு தொடங்கி நடத்தப்பட உள்ளது. அன்றைய தினம் தேர்வுக்கு தயார் செய்யும் விதம் தேர்வுக்கான பாட குறிப்புகள், தேர்வில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.
தொடர்ந்து பயிற்சி வகுப்பானது அனுபவமிக்க சிறப்பு வல்லுனர்களை கொண்டு நடத்தப்படுகிறது. பாடக் குறிப்புகள் வழங்கப்பட்டு மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் தங்களது பெயர் மற்றும் கல்வி தகுதியை குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தகவல் அனுப்பி தங்களது பெயரை பதிவு செய்ய வேண்டும். போட்டித் தேர்வு எழுதுபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.