தஞ்சையில், ஆம்னி பஸ் நிலையத்தை முதல் -அமைச்சர் விரைவில் திறந்து வைப்பார்
- முதல் தளத்தில் 7 கடைகளும், 6 தங்கும் அறைகளும், தனித்தனி கழிவறைகளும் கட்டப்பட்டுள்ளது.
- தரை தளத்தில் 9 கடைகள், பயண அலுவலகம் மற்றும் ஆண், பெண் கழிவறைகள் உள்ளன.
தஞ்சாவூர்:
தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.10 கோடியே 41 லட்சம் மதிப்பில் ஆம்னி பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் முடிவடைந்து விட்டன.
இந்த நிலையில் இன்று மதியம் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் நேரில் சென்று ஆம்னி பஸ் நிலையத்தை பார்வை யிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-தஞ்சையில் ஆம்னி பஸ்கள் இதற்கு முன்னர் பழைய பஸ் நிலையம் அருகே ஆங்காங்கே நின்று கொண்டிருந்தது. இதனால் மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டது.
இதனை ஒழுங்குப்படுத்தி ஆம்னி பஸ்களுக்கு என்று தனியாக பஸ் நிலையம் கட்ட மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது. பின்னர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்கி முடிவடைந்து விட்டன.
5400 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த பஸ் நிலையத்தில் 26 பஸ்களை நிறுத்தி வைக்கலாம். தரை தளத்தில் 9 கடைகள், பயண அலுவலகம் மற்றும் ஆண், பெண் கழிவறைகள் உள்ளன.
முதல் தளத்தில் 7 கடைகளும், 6 தங்கும் அறைகளும், தனித்தனி கழிவறைகளும் கட்டப்பட்டுள்ளது. நான்கு சக்கர இலகு ரக வாகனங்கள், தானியங்கி மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு என முன்புறம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சுற்றி வர தார் சாலையும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆம்னி பஸ் நிலையத்தால் பயணிகள் மிகவும் பயனடைவர். விரைவில் ஆம்னி பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் திறந்து வைப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது போது துணை மேயர் அஞ்சுகம் பூபதி, செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் ரமேஷ், 51-வது வார்டு தி.மு.க. செயலாளர் ராஜகுமார், மாவட்ட பிரதிநிதி உதேக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.படவிளக்கம்தஞ்சையில் ஆம்னி பஸ் நிலையத்தை மேயர் சண். ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அருகில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் பலர் உள்ளனர்.