உள்ளூர் செய்திகள்

தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மீண்டும் நட்டு வைக்கப்பட்ட மரத்திற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தண்ணீர் ஊற்றினார்.

தஞ்சையில், பெயர்க்கப்பட்ட ஆலமரம் மீண்டும் எடுத்து நட்டு வைக்கப்பட்டது

Published On 2023-05-18 10:23 GMT   |   Update On 2023-05-18 10:23 GMT
  • ஆலமரத்தின் அடிப்பகுதியை பெயர்த்து எடுத்து போதிய முன்னேற்பாடு பணிகளுடன் நட்டு வைக்கப்பட்டன.
  • ஓராண்டுக்குள் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் எம்.ஜி.எம். சாலை என்று அழைக்கப்படும் புதிய பஸ் நிலையம் சாலையில் விரிவாக்கம் பணிகள் நடந்து வந்தது. இந்த பணிக்காக சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இந்த சாலையோரம் சுமார் 50 ஆண்டுகள் பழமையான ஆலமரம் நீண்டு வளர்ந்து இருந்தது.

சாலை விரிவாக்கம் பணிக்காக தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இந்த ஆலமரத்தை வெட்டி அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் தஞ்சை மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி நிர்வாகம் ஆகியவை இந்த மரத்தை முழுவதுமாக வெட்டி அப்புறப்படுத்தாமல் மரத்தின் மேல் பகுதி மட்டும் அப்புறப்படுத்திவிட்டு அடியிலிருந்து சுமார் 7 அடி உயரம் வரை உள்ள மரத்தின் பகுதியை மட்டும் பெயர்த்து எடுத்து அதனை நட்டு பராமரிக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக கவின்மிகு தஞ்சை இயக்கத்துடன் இணைந்து அந்த ஆலமரத்தின் அடிப்பகுதியை பெயர்த்து எடுத்து அதனை கலெக்டர் அலுவலகம் வளாகத்தில் எடுத்து போதிய முன்னேற்பாடு பணிகளுடன் நட்டு வைக்கப்பட்டன.

இன்று வளாகத்தில் எடுத்து வைக்கப்பட்ட ஆலமரத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு தண்ணீர் ஊற்றினார்.

பின்னர் மரத்திற்கு தண்ணீர் ஊற்றி தேவையான சத்துக்கள் அளித்து நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:-

தஞ்சை மாவட்டத்தில் வீட்டுக்கு ஒரு விருட்சம் என்ற திட்டத்தின் கீழ் ஓராண்டுக்குள் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து ஊருக்கு ஒரு வனம் திட்டத்தின் கீழ் கிராமங்கள் தோறும் குறுங்காடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. சாலை விரிவாக்கத்துக்காக

தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மரங்களை வெட்ட நேர்ந்தால் அதற்கு பதில் 10 முதல் 20 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். தற்போது எடுத்து வைக்கப்பட்ட ஆலமரத்தை முழுவதுமாக வெட்டி அப்புறப்படுத்த மனமில்லாமல் அதனை பெயர்த்து எடுத்து மீண்டும் நட்டு பராமரித்து வருகிறோம்.

மரங்கள் வளர்த்தால் தூய்மையான காற்று, நிழல் கிடைக்கும். அனைவரும் அதிகளவில் மரங்கள் நட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செந்தில்குமார், உதவி கோட்டப் பொறியாளர் கீதா, உதவி பொறியாளர் மோகனா, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், பொறியாளர் முத்துக்குமார், ஆர்.ஏ.இ ன்பெரா கன்ஸ்ட்ரக்சன் பி.ஆர்.ஒ திருமாறன், இன்ஜினியர்கள் சுடலை, கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News