search icon
என் மலர்tooltip icon
    • ஆலமரத்தின் அடிப்பகுதியை பெயர்த்து எடுத்து போதிய முன்னேற்பாடு பணிகளுடன் நட்டு வைக்கப்பட்டன.
    • ஓராண்டுக்குள் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் எம்.ஜி.எம். சாலை என்று அழைக்கப்படும் புதிய பஸ் நிலையம் சாலையில் விரிவாக்கம் பணிகள் நடந்து வந்தது. இந்த பணிக்காக சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

    இந்த சாலையோரம் சுமார் 50 ஆண்டுகள் பழமையான ஆலமரம் நீண்டு வளர்ந்து இருந்தது.

    சாலை விரிவாக்கம் பணிக்காக தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இந்த ஆலமரத்தை வெட்டி அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் தஞ்சை மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி நிர்வாகம் ஆகியவை இந்த மரத்தை முழுவதுமாக வெட்டி அப்புறப்படுத்தாமல் மரத்தின் மேல் பகுதி மட்டும் அப்புறப்படுத்திவிட்டு அடியிலிருந்து சுமார் 7 அடி உயரம் வரை உள்ள மரத்தின் பகுதியை மட்டும் பெயர்த்து எடுத்து அதனை நட்டு பராமரிக்க முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக கவின்மிகு தஞ்சை இயக்கத்துடன் இணைந்து அந்த ஆலமரத்தின் அடிப்பகுதியை பெயர்த்து எடுத்து அதனை கலெக்டர் அலுவலகம் வளாகத்தில் எடுத்து போதிய முன்னேற்பாடு பணிகளுடன் நட்டு வைக்கப்பட்டன.

    இன்று வளாகத்தில் எடுத்து வைக்கப்பட்ட ஆலமரத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு தண்ணீர் ஊற்றினார்.

    பின்னர் மரத்திற்கு தண்ணீர் ஊற்றி தேவையான சத்துக்கள் அளித்து நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் வீட்டுக்கு ஒரு விருட்சம் என்ற திட்டத்தின் கீழ் ஓராண்டுக்குள் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து ஊருக்கு ஒரு வனம் திட்டத்தின் கீழ் கிராமங்கள் தோறும் குறுங்காடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. சாலை விரிவாக்கத்துக்காக

    தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மரங்களை வெட்ட நேர்ந்தால் அதற்கு பதில் 10 முதல் 20 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். தற்போது எடுத்து வைக்கப்பட்ட ஆலமரத்தை முழுவதுமாக வெட்டி அப்புறப்படுத்த மனமில்லாமல் அதனை பெயர்த்து எடுத்து மீண்டும் நட்டு பராமரித்து வருகிறோம்.

    மரங்கள் வளர்த்தால் தூய்மையான காற்று, நிழல் கிடைக்கும். அனைவரும் அதிகளவில் மரங்கள் நட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செந்தில்குமார், உதவி கோட்டப் பொறியாளர் கீதா, உதவி பொறியாளர் மோகனா, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், பொறியாளர் முத்துக்குமார், ஆர்.ஏ.இ ன்பெரா கன்ஸ்ட்ரக்சன் பி.ஆர்.ஒ திருமாறன், இன்ஜினியர்கள் சுடலை, கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தனியார் பஸ், மோட்டார் சைக்கிளில் சென்றவர்களுக்கு வழிவிடவில்லை.
    • போலீசார் வழக்குபதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே நாச்சியார் கோவில் அடுத்த கூகூரை சேர்ந்த தமிழழகன், (வயது 27) அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (28) பாண்டியன் (29) மகேஷ் பாபு, (38) பவித்ரன் (27) ஆகிய 5 பேர் 2 மோட்டார் சைக்கிளில் குடவாசல் மணக்காலுக்கு சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது திருவிடைச்சேரியிலிருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ், மோட்டார் சைக்கிளில் சென்றவர்களுக்கு வழி விடவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த 5 பேரும் ஆலத்தூர் ரோடு பேருந்து நிறுத்தம் அருகே பஸ்சை மறித்து நிறுத்தினர்.

    பின்னர் பஸ்சின் பக்கவாட்டில் உள்ள கண்ணாடியை உடைத்து பஸ் கண்டக்டர் அருண்குமாரை தாக்கினர்.

    இதில் காயம் அடைந்த அருண்குமார் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து அருண்குமார் நாச்சியார் கோவில் போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.

    இது குறித்து நாச்சியார் கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 9 நவதானியங்களால் மூலை அனுமாருக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெறுகிறது.
    • வைகாசி அமாவாசை அன்று ரிஷப ராசியில் பிறந்தவர்கள் வழிபடுவது சிறப்பாகும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மேலவீதியில் மூலை அனுமார் கோவில் அமைந்துள்ளது.

    தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது.

    சேதுபாவா சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூலை அனுமார் வாலில் சனீஸ்வரன் பகவான் உட்பட நவக்கிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம்.

    இக்கோவில் வாஸ்து தோஷம் மற்றும் நவக்கிர தோஷ பரிகாரம் ஸ்தலமாக திகழ்கிறது. இங்கு பக்தர்கள் அமாவாசை தோறும் 18 அகல் தீபமேற்றி 18 வலம் வந்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் நாளை ( வெள்ளிக்கிழமை) வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு இலட்ச ராம நாமம் ஜெபம் நடைபெறும்.

    தொடர்ந்து காலை10 மணிக்கு வறுமை மற்றும் கடன் தொல்லைகளை நிவர்த்தியாகும் தேங்காய் துருவல் அபிஷேகம் மற்றும் சிறப்பு பாலாபிஷேகம் , சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது.

    மாலை 6 மணிக்கு நவக்கிரக தோஷம் நீங்க வேண்டி சம்பா கோதுமை,கொள்ளு, துவரை, மொச்சை, கொண்டகடலை,

    பயிறு, எள், காரமணி, கருப்பு உளுந்து போன்ற ஒன்பது நவதானியங்களால் மூலை அனுமாருக்கு சிறப்பு அலங்காரமும் தீபாராதனையும் நடைபெறுகிறது.

    அதனைத் தொடர்ந்து அல்லல் போக்கும் அமாவாசை 18 வலம் வரும் நிகழ்ச்சியும் அதையடுத்து 1008 எலுமிச்சை பழங்களான மாலை சாற்றி வழிபாடு நடைபெறுகிறது.

    வைகாசி அமாவாசை அன்று ரிஷப ராசியில் பிறந்தவர்கள் வழிபடுவது சிறப்பாகும்.

    அமாவாசை அன்று பக்தர்கள் தங்களால் இயன்ற அளவு நவதானியங்களை வாங்கி வந்து மூலை அனுமாருக்கு படைத்து அதனை திரும்ப பெற்று வீட்டிற்கு எடுத்துச் சென்று நவதானியங்களை இரவில் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அதனை வடிகட்டி வெல்லம் சேர்த்து பசுமாட்டிற்கு கொடுத்தால் நவக்கிரக தோஷங்கள் யாவும் நீங்குகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    இந்த வழிபாட்டை ஏராளமான பக்தர்கள் மேற்கொள்ள வருவது குறிப்பிடத்தக்கது.

    இவ்வழிப்பாட்டிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் அமாவாசை வழிபாட்டு குழுவினர் செய்து வருகிறார்கள்.

    • நடப்பு நிதியாண்டில் 1,300 பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
    • இணையதளத்தில் முன்பதிவு செய்து பயன்பெறலாம்.

    தஞ்சாவூர்:

    தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் மானியத்தில் மாடி தோட்டம் அமைக்க, பயனாளிகளுக்கு தஞ்சாவூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் கலைச்செல்வன் அழைப்பு விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மாடி தோட்டம் மூலம் காய்கறி உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க நடப்பு நிதியாண்டில் 1,300 பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    ஒரு பயனாளிக்கு 450 ரூபாய் மதிப்பில் காய்கறி வளர்ப்பு பைகள், 2 கிலோ கோகோ பீட், 6 வகையான காய்கறி விதைகள், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, டிரைக்கோடெர்மா விரிடி, வேப்பெண்ணெய், தொழில் நுட்ப கையேடு, பாஸ்போர்ட் அளவு போட்டோவுடன் அந்தந்தவட்டார தோட்ட க்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அல்லது www.tnhorticulture.tn.gov.in/kit என்ற இணைய தளத்தில் முன்பதிவு செய்து பயன் பெறலாம்.

    திட்ட விபரங்களுக்கு கீழ்க்கண்டவட்டார தோட்டக்கலை உதவிஇயக்கு நர்களை தொடர்பு கொள்ள வேண்டும். தஞ்சாவூர் மற்றும் பூதலூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் - 9943422198. ஓரத்தநாடு மற்றும் திருவோணம் தோட்டக்கலை உதவி இயக்குநர் -9488945801.

    பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் தோட்டக்கலை உதவி இயக்குநர்- 9597059469.

    கும்பகோணம், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் உதவி இயக்குநர்- -9842569664.

    பாபநாசம், அம்மாப்பேட்டை மற்றும் திருவையாறு தோட்டக்கலை உதவி இயக்குநர் -9445257303.

    பேராவூரணி மற்றும் சேதுபா வாசத்திரம் தோட்ட க்கலை உதவி இயக்குநர் 8903431728 ஆகிய செல்போன் எண்களில் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 100-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்ய உள்ளனர்.
    • 8 முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ, பட்டதாரிகள் ஆகியோர் கலந்து கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் அலுவலக வளாகத்திலேயே நடத்தப்பட்டு வருகின்றன.

    இதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தஞ்சாவூரில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100-க்கும் அதிகமான காலிப்பணியி டங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இம்முகாமானது தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இம்முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ, பட்டதாரிகள் ஆகியோர் கலந்து கொள்ள லாம்.

    மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்.

    இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன்;-

    கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது.

    மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 25-ந்தேதி இரவு வள்ளி திருமணம், நாடகமும் நடைபெறவுள்ளது.
    • விழாவில் ஹரிசந்திரா, வள்ள திருமணம் போன்ற நாட்டிய நாடகங்கள் நடைபெற உள்ளன.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள மெலட்டூரில் பாகவத மேளா என்கிற தெய்வீக நாட்டிய நாடகக் கலைவிழா 500 ஆண்டுக்கும் மேலாக பாரம்பரியம் மாறாமல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

    தெலுங்கு மொழியில் படைக்கப்பட்ட இந்த பாகவதமேளா என்கிற நாட்டிய நாடகம் மெலட்டூர் லெக்ஷ்மி நரசிம்ம ஜெயந்தி பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு பாகவத மேளா நாடகவிழா ஸ்ரீலெக்ஷ்மி நரசிம்மர் ஆலய வளாகத்தில் லெட்சார்ச்ச னையுடன் துவங்கி 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பிரகலாதா சரித்திரம், ஹரிசந்திரா, வள்ள திருமணம் போன்ற நாட்டிய நாடகங்கள் நடைபெற உள்ளன.

    தினமும் இரவு துவங்கும் பாகவத மேளா நாடகங்கள் அதிகாலை வரை நடைபெறும். இந்த நாடகங்களில் ஆண்களே, பெண்கள் வேடம் தரித்து நடிப்பர்.

    இந்நாடக நடிகர்கள் தொழில்முறை நாடகக் கலைஞர்கள் அல்ல.

    இவர்கள் அனைவரும் வங்கி, தனியார் நிறுவனம், சாப்ட்வேர் கம்பெனி என பல்வேறு துறைகளில் வேலை பார்க்கும் அதிகாரிகளாக இந்தியா முழுவதும் பல இடங்களில் பணிபுரிந்து வரும் இவர்கள் மெலட்டூர் உள்ளுர் வாசிகள்.

    மேலும் குடும்பம் வழிவழியாக தந்தை,மகன் என தொடர்ந்து நடித்து இந்த நாடகங்களை இறைவனுக்கு அர்ப்பணம் செய்கின்றனர்.

    தெய்வீகம், இசை, நாட்டிய மரபுகள் நிறைந்த பாகவத மேளா பழமை மாறாமல் ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரியமாக மெலட்டூரில் நடத்தப்பட்டு வருகிறது.நேற்று முதல் நாளன்று இரவு பிரகலாதா சரித்திரம் எனும் நாடகம் நடைபெற்றது, நாடகத்தினை உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பொது மக்கள் பலரும் கண்டு களித்தனர்.

    21-ந்தேதி ஹரிச்சந்திரா முதல்பாகமும், 22ந்தேதி ஹரிச்சந்திரா 2-ம்பாகம் நாடகமும்,24 ந்தேதி லீலா விலாசம் எனும் நாடகமும், 25 ந்தேதி இரவு வள்ளி திருமணம் நாடகமும் நடைபெறவுள்ளது.

    தினசரி பல்லேறு நடன கலை நிகழ்ச்சிகளும் நடை பெறவுள்ளது.

    நாடக விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ லெக்ஷ்மி நரசிம்ம ஜெயந்தி பாகவத மேளா நாட்டிய நாடக சங்க இயக்குநர் குமார் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • 10 ஆயிரம் கி.மீ சாலை நகர சாலைகளுடன் இணைக்கும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
    • 3 மாதத்தில் 14 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் ஒன்றியத்தில் நடைபெற்ற வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் 5500 பள்ளி வகுப்பறை கட்டடங்கள் ரூ.833 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு ஜூன் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 10 ஆயிரம் கிலோமீட்டர் சாலை நகர சவாலைகளுடன் இணைக்கும் வகையில் ரூ.4000 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது விரைவில் பணிகள் தொடங்கும்.

    அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் இரண்டு லட்சத்து 23 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகிறதுபொறுப்பேற்ற மூன்று மாதத்தில் 14,000 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றார்.

    இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன் பன்னீர்செல்வம் ராஜகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கள்ளச்சாராயம், போதை பொருள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு.
    • பொதுமக்களிடம் மது பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அளக்குடி கிராமத்தில் கள்ளச்சாராயம் மதுப்பழக்கம் மற்றும் போதைப் பொருள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் கொள்ளிடம் காவல்நிலையம் சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா கலந்து கொண்டு பொதுமக்களிடையே மது பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் போதை பொருள் பாதிப்பு குறித்தும் எடுத்துரைத்தார்.

    குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளோடு நேரத்தை செலவிடுங்கள் அதைவிட பெரிய போதை ஏதும் இல்லை என அறிவுரை வழங்கினார்.

    மேலும் கள்ளச்சார விற்பனை நடைபெற்றால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும் புகார் தெரிவிப்பவரின் விவரம் பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.

    இந்நிகழ்வில் சீர்காழி காவல்துறை கண்காணிப்பாளர் லாமேக், சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் காவல்துறை, மதுவிலக்கு அமலாக்க துறை அதிகாரிகள் திரளான கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

    • மாணவிகளுக்கு 19 வகையான போட்டிகள் நடைபெற உள்ளன.
    • விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கான கடைசி நாள் 23-ந்தேதியாகும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரூஸ்ரீ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:-

    விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத் துறையின் கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதற்கான மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் 24.05.2023 அன்று காலை 8.00 மணிக்கு திருவாரூர் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.

    மாணவர்களுக்கான தேர்வுப்போட்டிகள் கீழ்க ண்ட விளையாட்டுக்களில் நடைபெறும் தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட 20 வகையான போட்டிகளும், மாணவியர்களுக்கு 19 வகையான போட்டிகளும் நடைபெற உள்ளது.

    மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டி களில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் கொண்டுள்ள மாணவ, மாணவியர்கள் விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தினை 16.05.2023 முதல் விண்ணப்பிக்கலாம்.

    ஆன்லைன் விண்ணப்ப த்தினை பூர்த்தி செய்திடு வதற்கான கடைசி நாள் 23.04.2023 மாலை 5.00 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

    ஆன்லைன் விண்ணப்ப ங்கள் மட்டுமே ஏற்றுக்கொ ள்ளப்படும்.

    மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மைய அலைப்பேசி 9514000777 என்ற எண்ணிலும்,

    மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசி எண் 04366-290620-லும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 52 மனுக்கள் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
    • வருவாய் தொடர்பான பிரச்சனைகள் குறித்து நீதிமன்றம் மூலம் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில்நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    இதில் நேரடியாக வழங்கப்பட்ட 27 மனுக்களுடன் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்ட காவல்துறை தொடர்பான மனுக்கள் 25 உள்ளிட்ட 52 மனுக்கள் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள காவல் துறை அதிகாரிகளுக்கு எஸ்பி சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.

    மேலும் சொத்து பிரச்சனை, குடும்ப தகராறு, வருவாய் தொடர்பான பிரச்சனைகள் குறித்து நீதிமன்றம் மூலம் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது.

    இந்த முகாமில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் ஈஸ்வரன், வெள்ளைத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • நில ஒருங்கிணைப்பு மசோதாவை திரும்ப பெற வேண்டும்.
    • செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை நிறுத்த வேண்டும்.

    வேதாரண்யம்:

    நில ஒருங்கிணைப்பு மசோ தாவை திரும்ப பெற வேண்டும், செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை நிறுத்த வேண்டும், பருவம் தவறி பெய்த மழையால் பாதித்த நிலக்கடலை, உளுந்து, பயறு, எள் பயிர்க ளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வேதாரண்யம் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார்.

    இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன், மாவட்ட நிர்வாகக்குழு நாராயணன், ஒன்றிய துணை செயலாளர் பாலகுரு, பொருளாளா் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • 13 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நஞ்சை, புஞ்சை நிலங்கள் உள்ளன.
    • குத்தகை செலுத்தி வருபவர்கள் குத்தகை செலுத்த இயலாமல் உள்ளனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு 13 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நஞ்சை, புஞ்சை நிலங்கள் உள்ளன.

    இந்த நிலங்களில் ஓரளவுதான் கணக்கில் உள்ளது.

    பாக்கி நிலங்கள் யாரிடம், எவ்வளவு உள்ளது என்பது தெரியவில்லை.

    இதனால் பல ஆண்டுகளாக குத்தகை செலுத்தி வருபவர்கள் குத்தகை செலுத்த இயலாமல் உள்ளனர்.

    இந்நிலையில், கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்ய உத்தரவிடப்பட்டு அதன்படி, குரவப்புலம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை வட்டாட்சியர் அமுதா, கோவில் நிர்வாக அதிகாரி அறிவழகன் உள்பட கோவில் அலுவலர்கள், நில அளவையர் குழுவினர் நிலங்களை அளவீடு செய்து எல்லைக்கல் போட்டு வருகின்றனர்.

    ×