தஞ்சையில், இஞ்சி விலை கிடுகிடு உயர்வு
- இஞ்சி முன் எப்போதும் இல்லாத அளவில் வரலாறு காணாத அளவுக்கு விலை ஏறி உள்ளது.
- பீன்ஸ் கிலோ ரூ.110, பச்சை மிளகாய் கிலோ ரூ.100 முதல் 120 வரை விற்கப்பட்டன.
தஞ்சாவூர்:
நாடு முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக காய்கறிகளின் விலை உச்சத்தை எட்டி உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, தஞ்சாவூர் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் காய்கறி, மளிகை பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாகவே தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே காணப்படுகிறது. இன்று தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.110 முதல் ரூ.120 வரை விற்கப்படுகிறது. சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.150 முதல் ரூ.160 வரை விற்பனையானது. கடந்த சில நாட்களாக தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை தான் உயர்ந்து காணப்பட்டது என்றால் தற்போது அந்த வரிசையில் பீன்ஸ், பச்சை மிளகாய் ,இஞ்சி ஆகியவையம் சேர்ந்துள்ளது. இதனால் காய்கறி, மளிகை பொருட்கள் வாங்குவதே பொதுமக்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.
இதில் இஞ்சி முன் எப்போதும் இல்லாத அளவில் வரலாறு காணாத அளவுக்கு விலை ஏறி உள்ளது. இன்று கிலோ ரூ.300-க்கு விற்பனையானது. பீன்ஸ் கிலோ ரூ.110, பச்சை மிளகாய் கிலோ ரூ.100 முதல் 120 வரை விற்கப்பட்டன. இதே போல் பெரிய வெங்காயம் கிலோ ரூ.30, கத்தரிக்காய் ரூ.60 முதல், கேரட் ரூ.70, சவ்சவ் ரூ.35, உருளைக்கிழங்கு ரூ.35 ஆகிய விலைகளிலும் விற்பனை செய்யப்பட்டன. இதேபோல் மளிகைப் பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் ,பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். காய்கறிகளின் விலை குறைந்து எப்போது நாம் நிம்மதியாக நிறைவாக சமையல் செய்வோம் என்ற எதிர்பார்ப்புடன் இல்லத்தரசிகள் உள்ளனர்.
காய்கறிகளின் விலை உயர்வு குறித்து வியாபாரிகள் கூறும்போது:-
பருவம் தவறி பெய்த மழை மற்றும் கடுமையான வெப்பத்தின் காரணமாக தக்காளி, சின்ன வெங்காயத்தின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது . இதேபோல் இஞ்சி, பச்சைமிளகாய் விளைச்சலும் வழக்கத்தை விட மிகக் குறைவாக இருந்தன. இதனால் வெளி மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து தஞ்சைக்கு வரும் காய்கறிகளின் அளவு குறைவாகவே காணப்பட்டு வருகிறது.
இப்படி விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவால் அவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளன.
இன்னும் இரண்டு வாரத்திற்கு இந்த நிலைதான் நீடிக்கும். அதன் பிறகு வரத்து அதிகமான உடன் காய்கறி விலை குறைய தொடங்கும் என்றனர்.