தஞ்சையில், புத்தாடை- பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது
- தஞ்சை காந்திஜி சாலை, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
- மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு.
தஞ்சாவூர்:
தீபாவளி பண்டிகை தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
இதை முன்னிட்டு மக்கள் பலகாரம் செய்தல், புத்தாடை வாங்குதல், வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குதல், பட்டாசு வாங்குவது, உடன் பிறந்த சகோதரிகளுக்கு சீர் முறைகளை செய்தல் உள்ளிட்ட பணிகளில் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்களை வாங்கவும் மக்கள் மும்முரம் காட்டி வருகிறார்கள்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்தும் தயார் செய்யப்பட்ட புத்தாடைகள், பட்டாசுகள் உள்ளிட்ட பொருட்கள் தஞ்சாவூர் நகர பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக தஞ்சையில் தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். விடுமுறை நாளான நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.
இன்றும் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. தஞ்சை காந்திஜி சாலை, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு புத்தாடைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. இதேபோல் பட்டாசு கடைகளிலும் அதிக அளவில் பொதுமக்கள் கூட்டம் காணப்படுகிறது.
தீபாவளிக்கு இன்னும் 1 வாரமே உள்ளதால் வரக்கூடிய நாட்களில் இன்னும் அதிக அளவில் பொதுமக்கள் கூட்டம் காணப்படும்.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மப்டியில் நின்றும் கண்காணித்து வருகின்றனர்.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.