திருச்செந்தூர் கோயிலில், பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை- அறங்காவல் குழு தகவல்
- பறிமுதல் செய்யப்படும் செல்போன்களை மீண்டும் ஒப்படைக்க கூடாது என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- ஜீன்ஸ், டிசர்ட் அணிந்து கோவிலுக்குள் செல்ல கூடாது என பக்தர்களுக்கு அறிவுரை.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும், பறிமுதல் செய்யப்படும் செல்போன்கள் மீண்டும் ஒப்படைக்க கூடாது என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, செய்தியாளர்களைச் சந்தித்த கோயில் அறங்காவல் குழு தலைவர் அருள் முருகன், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட அனைத்து வழிமுறைகளும், திருச்செந்தூர் கோயிலில் மூன்று நாட்களில் அமல்படுத்தப் படும் என கூறினார்.
எடுத்தவுடன் பறிமுதல் செய்தால் பிரச்சினை ஏற்படும் என்பதால், செல்போன் கொண்டு செல்ல கூடாது என்று பக்தர்களுக்கு முதலில் அறிவுரை வழங்கப்படும் என்றார். மேலும் பக்தர்களின் செல்போன்களை வைப்பதற்கு பலகைகள் மற்றும் செல்போன்கள் குறித்து அறிவதற்கான ஸ்கேனிங் மெஷின் போன்றவை ஆர்டர் செய்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அதேபோல் பக்தர்கள் ஜீன்ஸ், டிசர்ட் அணிந்து கோயிலுக்குள் செல்ல கூடாது என்பது உள்பட உயர்நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தும் பக்தர்களிடம் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.