வேதாரண்யத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
- கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.
- இறவை பாசனதிட்ட மின்மோட்டார்களை பழுதுபார்த்து சீரமைக்க வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா அலுவலகத்தில் வட்டார அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் சமூக நலத்துறை தனிப்பிரிவு தாசில்தார் ரமேஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மின்சாரம், தோட்டக்கலை உள்பட பல துறை அதிகாரிகள் தங்களது துறைகளில் உள்ள திட்டம் குறித்து விளக்கினர்.
கூட்டத்தில் வேதாரண்யம் விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் கிராமங்களில் தங்கி பணியாற்ற வேண்டும், வடிகால் வாய்க்காலில் மண்டிக்கிடக்கும் ஆகாயதாமரை செடிகளை அகற்றி தூர்வாரப்பட வேண்டும், கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், தகட்டூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள இறவை பாசனதிட்ட மின்மோட்டார்களை பழுதுபார்த்து சீரமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.
இதற்கு பதிலளித்து கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின் பேசியதாவது:-
விவசாயிகளின் குறைகள் அனைத்தும் சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வேதாரண்யம் பகுதி முழுவதும் உள்ள ஆக்கிரமிப்பில் இருக்கும் அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகளை மீட்டு, வடிகால் பகுதிகளில் உள்ள ஆகாயதாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
துணை தாசில்தார் மாதவன் அனைவரையும் வரவேற்றார்.
முடிவில் தனித்துறை ரமேஷ் நன்றி கூறினார்.