தஞ்சையில் அருங்காட்சியகம் திறப்பு விழா
- தஞ்சாவூர் மாவட்டத்தின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் பலவித பாரம்பரிய பொருட்கள் இடம் பெற்றுள்ளன.
- தஞ்ைச சுற்றுலா தலங்கள் வரிசையில் தற்போது இந்த அருங்காட்சியகமும் இடம்பெற்றுள்ளது.
தஞ்சாவூர்:
ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பிரிட்டிஷ் கட்டிட வல்லுநர் ராபர்ட் சிஷோலம் என்பவர் தலைமையில் 1896-1900 கால கட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டது.
இந்தோ - சாராசனிக் கட்டிடக்கலை அம்சத்தில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் தான் கடந்த 115 ஆண்டுகளாக கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இட நெருக்கடி காரணமாக தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது .
இதையடுத்து பழமை வாய்ந்த பழைய மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடத்தை பாதுகாத்து அருங்காட்சியமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது .
அதன்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அருங்காட்சியகம் அமைக்கப்ப ட்டுள்ளது. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் இங்கு வந்து பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து உரிய ஆலோசனை வழங்கினார்.
இந்த நிலையில் பணிகள் அனைத்தும் முடிவு அடைந்ததால் அருங்காட்சியகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அருங்காட்சியகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த அருங்காட்சியகத்தில் 7டி தியேட்டர், அரிய வகை பறவைகள் பூங்கா, இசைக்கு ஏற்றபடி நடனமாடும் செயற்கை நீரூற்று, சரஸ்வதி மகால் நூலக காட்சியறை, பழங்கால சிற்பங்கள் காட்சியறை, நில அளவீட்டு துறை காட்சியறை உள்பட பல்வேறு காட்சிக்கூடங்கள் உள்ளன. மேலும் இந்தக் கட்டிடத்தின் ஒவ்வொரு அறையிலும் தஞ்சாவூர் மாவட்டத்தின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் புவிசார் குறியீடு பெற்ற 10 பொருட்களும் மற்றும் பலவித பாரம்பரிய பொருட்கள் இடம் பெற்றுள்ளன. மாவட்டத்தின் சிறப்புகளை விளக்கும் தகவல் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளது.
கட்டிடத்தின் வெளியே தரை தளம் முழுவதும் கருங்கல் பதிக்கப்பட்டுள்ளது. பழமை மாறாமல் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சுண்ணாம்பு கலவை பூச்சுகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
அந்தந்த அரசுத்துறைகள் சார்பிலும் பழமையான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இப்படி அருங்காட்சியகம் முழுவதும் அரிய வகை பொக்கிஷங்களால் நிரம்பி உள்ளது. அருங்காட்சியத்துக்கு வரும் மாணவ -மாணவிகள் மிகவும் பயன்பெறுவார்கள். பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது.
இது தவிர தஞ்சைக்கு வரும் உள்ளூர், வெளிமாநிலம், வெளிநாடு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் அருங்காட்சியகத்தை பார்வையிடுவர். இதன் மூலம் தஞ்சை நகரில் பெரிய கோவில், மணிமண்டபம், அரண்மனை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் வரிசையில் தற்போது இந்த அருங்காட்சியகமும் இடம்பெற்றுள்ளது.
இந்த அருங்காட்சியக திறப்பு விழா நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம் , மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, தாசில்தார் சக்திவேல், போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா, துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, இன்ஸ்பெக்டர் சந்திரா, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், டாக்டர்கள் சிங்காரவேலு,ராதிகா மைக்கேல், பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.