- இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.
- தஞ்சையில் இன்று புதிய பஸ்நிலை அருகே உள்ள ஒரு மஹாலில் திட்டத் தொடக்க விழா நடைபெற்றது.
தஞ்சாவூர்:
தமிழக பட்ஜெட்டில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு அவர்கள் இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை மாதந்தோறும் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம்- புதுமைப்பெண் திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த திட்டத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.
தஞ்சையில் இன்று புதிய பஸ்நிலை அருகே உள்ள ஒரு மஹாலில் திட்டத் தொடக்க விழா நடைபெற்றது.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி அகன்ற திரையில் ஒளிபரப்பப்பட்டது. முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததும் மாணவிகளுக்கு கையேடு அடங்கிய பை வழங்கப்பட்டது.
அதில் ஏ.டி.எம். கார்டு, புதுமைப்பெண் திட்டத்தின் விளக்கம் கையேடு, மேல்படிப்பு படிப்பதற்கான கையேடு ஆகியவை அடங்கி இருந்தது.
தஞ்சையில் 472 மாணவிகளுக்கு இந்த வரவேற்பு கையேடு அடங்கிய பையை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு இந்த பை வழங்கப்பட்டது.
மொத்தம் தஞ்சை மாவட்டத்தில் 3765 மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் பயனடைந்துள்ளனர்.
தஞ்சையில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் ராஜேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார். கூடுதல் கலெக்டர் சுகபுத்திரா வாழ்த்துரை வழங்கினார்.
இதில் எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், ஜவாஹிருல்லா, தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், தாசில்தார் மணிகண்டன் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.