சாலையில் சுற்றி திரியும் மாடுகள் பிடிப்பட்டால் உரிமையாளர்களுக்கு அபராதம்
- வாகன ஓட்டிகளுக்கும் இடையூராக சுற்றித்திரியும் கால்நடைகள் சுற்றி திரிகிறது.
- இதுநாள் வரை 43 மாடுகள், 42 கன்றுகள் பிடிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட 51 வார்டுகளில் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூராக சுற்றித்திரியும் கால்நடைகளை மாநகராட்சி பணியாளர்கள் மூலம் காப்பகத்திற்கு கொண்டு செல்லவும், அபராத தொகை விதிக்கவும் தஞ்சாவூர் மாநகராட்சி மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் இந்த பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாடுகளின் உரிமைதாரர்களுக்கு அபராத தொகையாக முதல்முறை பிடிபடும் மாடு ஒன்றுக்கு அபராதம் ரூ.3000- மற்றும் கன்று ஒன்றுக்கு ரூ.1500, இரண்டாவது முறை அதே மாடு பிடிக்கப்படும் நிலையில் அதன் அபராத தொகையாக மாடு ஒன்றுக்கு ரூ.4000, கன்று ஒன்றுக்கு ரூ.2000, மூன்றாவது முறை அதே மாடு பிடிக்கப்பட்டால் அதன் அபராத தொகையாக மாடு ஒன்றுக்கு ரூ.5000, கன்று ஒன்றுக்கு ரூ.2500 வசூலிக்கப்பட்டு வந்தது.
இதுநாள் வரை 43 மாடுகள், 42 கன்றுகள் பிடித்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது மாநகராட்சியில் தொடர்ந்து சாலையோரத்தில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து பராமரிப்பதற்கு கூடுதல் செலவினங்கள் ஏற்படுவதினால் முதல்முறை பிடிபடும் மாடு ஒன்றுக்கு அபராதம் ரூ.5000, கன்று ஒன்றுக்கு ரூ.1500 வசூலி க்கப்படும்.
இரண்டாவது முறை அதே மாடு பிடிக்கப்படும் நிலையில் ரூ.10000-ம் கன்று ஒன்றுக்கு ரூ.5000 வசூலிக்கப்படும். மூன்றாவது முறை அதே மாடு பிடிக்கப்பட்டால் ரூ.15000, கன்று ஒன்றுக்கு ரூ.10000 வசூலிக்கப்படும்.
நான்காவது முறை அதே மாடு தொடர்ந்து பிடிக்கப்பட்டால் கோசாலைக்கு அனுப்பப்படும்.
எனவே கால்நடை உரிமைதாரர்கள் தங்கள் கால்நடைகளை தங்களுக்கு உரிய இடத்தில் பராமரித்து, பாதுகாத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.