பலாப்பழம் வரத்து அதிகரிப்பு கிலோ ரூ.35 முதல் ரூ.45 வரை விற்பனை
- சேலம் மார்க்கெட்டில், பண்ருட்டி பலாப்பழம், கொல்லிமலை பலாப்பழம் மற்றும் கேரள பலாப்பழம் ஆகிய வகைகள் விற்பனைக்கு வருகின்றன.
- தற்போது பண்ருட்டி வட்டாரத்தில் பலாப்பழம் அறுவடை சீசன் தொடங்கி உள்ளது.
சேலம்:
சேலம் மார்க்கெட்டில், பண்ருட்டி பலாப்பழம், கொல்லிமலை பலாப்பழம் மற்றும் கேரள பலாப்பழம் ஆகிய வகைகள் விற்பனைக்கு வருகின்றன.
பண்ருட்டி பலாப்பழம்
தற்போது பண்ருட்டி வட்டாரத்தில் பலாப்பழம் அறுவடை சீசன் தொடங்கி உள்ளது. சீசன் காரணமாக பலாப்பழம் லோடு அதிகளவில் சேலத்துக்கு கொண்டு வரப்படுகிறது.
சேலம் சத்திரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பழ மண்டிகளில் பண்ருட்டி பலாப்பழங்கள், 5 கிலோ முதல் 40 கிலோ எடை வரையில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தேர்வு செய்து தங்களுக்குப் பிடித்தமானவற்றை வாங்கிச் செல்கின்றனர்.
மேலும் சில்லரை வியாபாரிகள் இங்கிருந்து வாங்கிச் சென்று சில்லரை விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
பலாப்பழம் வரத்து குறித்து கடைக்காரர்கள் கூறியதாவது:-
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சுற்று வட்டாரங்களில் விளையும் பலாப்பழம், தனித்த சுவை கொண்டது. தற்போது அறுவடை தொடங்கி உள்ளது.
சேலத்தில் ஒவ்வொரு பழ மண்டிக்கும் தேவைக்கேற்ப 2 நாட்களுக்கு ஒருமுறை சராசரியாக 2 முதல் 4 டன் வரை பண்ருட்டி பலாப்பழங்கள் கொண்டு வரப்படுகின்றன.
போக்குவரத்து செலவு, நடைமுறை செலவு ஆகியவை அதிகரித்துவிட்டதால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பலாப்பழத்தின் விலை அதிகரித்துவிட்டது.
கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது கிலோ ரூ.35 முதல் ரூ.45 வரை விற்பனையாகிறது. பலாப்பழங்கள் ஒவ்வொன்றும் 5 கிலோ முதல் 40 கிலோ வரை எடையுடன் கிடைக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.