கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு பரமத்தியில் மோர், தயிர் விலை உயர்வு
- வெயிலில் இருந்து காத்துக் கொள்ள, உடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர், மோர், தயிர் போன்றவற்றை மக்கள் அதிகளவில் எடுத்துக் கொள்கின்றனர். இதனால் மோர், தயிர், இளநீர் விற்பனை அதிகரித்து உள்ளது.
- பரமத்திவேலூர் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட தயிர், மோர் விற்பனை கடைகள் உள்ளது.
பரமத்திவேலூர்:
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் வெயிலில் இருந்து காத்துக் கொள்ள, உடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர், மோர், தயிர் போன்றவற்றை மக்கள் அதிகளவில் எடுத்துக் கொள்கின்றனர். இதனால் மோர், தயிர், இளநீர் விற்பனை அதிகரித்து உள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட தயிர், மோர் விற்பனை கடைகள் உள்ளது. உடலுக்கு குளிர்ச்சி என்பதால், குடும்பத்துக்கு தேவையான அளவு மோர், தயிரை மக்கள் வாங்கி செல்கின்றனர்.
கடந்த வாரம் மோர் ஒரு லிட்டர் ரூ.30-க்கும், தயிர் ஒரு லிட்டர் ரூ.80-க்கும் விற்பனை செய்தனர். இந்த நிலையில் தற்போது மோர் ஒரு லிட்டர் ரூ.40-க்கும், தயிர் ஒரு லிட்டர் ரூ.90-க்கும் விலையை உயர்த்தி விற்பனை செய்து வருகின்றனர்.
இது பற்றி கடை உரிமையாளர்கள் கூறும்போது, கோடை காலம் என்பதால் மோர், தயிர் விற்பனை அதிகரித்துள்ளது. தற்போது பால் கொள்முதல் விலை உயர்ந்துள்ளது.
மேலும் போக்குவரத்து செலவு, கடை வாடகை, வேலையாட்களின் சம்பளம் ஆகியவையும் உயர்ந்து உள்ளதால், மோர், தயிர் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என கூறினார்.