முதுமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
- கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் மழையின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
- மசினகுடிக்கு செல்லும் சாலையில் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தரைப்பாலம் மூழ்கியது.
கூடலூர்:
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை தொடர் கனமழை பெய்தது. இதேபோல் கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் மழையின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதித்தது. அண்டை மாநிலங்கள் உட்பட பல இடங்களில் மழை அதிகமாக பெய்ததால் நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. குறிப்பாக கூடலூரில் இருந்து மசினகுடிக்கு செல்லும் சாலையில் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் இன்றி முதுமலை வெறிச்சோடியது.
இந்த நிலையில் மழை குறைந்து பரவலாக வெயில் காணப்படுகிறது. மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் திரும்பி உள்ளது. தொடர்ந்து மாயாற்றில் வெள்ளம் குறைந்து விட்டது. இதைத்தொடர்ந்து போக்குவரத்து வழக்கம் போல் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக முதுமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. தொடர்ந்து தெப்பக்காடு முகாமில் வளர்ப்பு யானைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
மேலும் யானைகளுக்கு வன ஊழியர்கள் உணவு தயார் செய்வதை பார்வையிட்டனர். இதனால் வளர்ப்பு யானைகள் முகாம் களை கட்டி உள்ளது. தொடர்ந்து தனியார் வாகன சவாரி மற்றும் சுற்றுலா சார்ந்த தொழில்களும் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கடந்த சில வாரங்களாக தொடர் கனமழை உள்ளிட்ட காரணங்களால் சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவாக இருந்தது. தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளதால் வாகன சவாரி, வளர்ப்பு யானை முகாமுக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகின்றனர் என்றனர்.