கோத்தகிரியில் பச்சை தேயிலை மகசூல் அதிகரிப்பு
- மகசூல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
- 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், தேயிலைத் தொழிற்சாலை தொழிலாளர்கள் உள்ளனர்.
கோத்தகிரி
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. இந்த தொழிலை நம்பி 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள், தேயிலைத் தொழிற்சாலை தொழிலாளர்கள் உள்ளனர். கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழை போதுமான அளவு பெய்தது. மேலும் வெயில், மழை என இதமான சீதோஷ்ண காலநிலை நிலவி வருகிறது.
இதனால் தேயிலை தோட்டங்களில் உள்ள செடிகளில் தற்போது கொழுந்துகள் அதிகம் வளர்ந்து உள்ளன. இதன் காரணமாக மகசூல் அதிகரித்து உள்ளது. பச்சை தேயிலை ஒரு கிலோ குறைந்தபட்சம் ரூ.18-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கொள்முதல் விலை போதுமானதாக இல்லா விட்டாலும், மகசூல் அதிகரித்து உள்ளதால் கணிசமான வருவாய் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இந்தநிலையில் பச்சை தேயிலையை பறிப்பதற்கு போதிய தொழிலாளர்கள் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் தேயிலை கொழுந்துகளை அறுவடை செய்வதற்கு, கையால் இயக்கும் எந்திரம், மோட்டார் மூலம் அறுவடை செய்யும் எந்திரம் மற்றும் அதி நவீன எந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர். தேயிலை எஸ்டேட் உரிமையாளர்கள் மோட்டார் மற்றும் காற்றால் இயங்கக்கூடிய அதி நவீன எந்திரங்களை பயன்படுத்தி ஒரு மணி நேரத்தில் 300 கிலோ வரை தேயிலையை அறுவடை செய்கின்றனர்.
இதேபோல் சிறு தேயிலை விவசாயிகள் கைகளால் இயக்கும் கத்தரிக்கோல் வடிவிலான எந்திரம் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட எந்திரங்களை பயன்படுத்தி அறுவடை செய்து வருகின்றனர். வடமாநில தொழிலாளர்கள் ஒரு கிலோ பச்சை தேயிலை பறிக்க ரூ.6 கூலியாக பெற்று வருகின்றனர்.
தற்போது தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளதால், விவசாயிகள் அதனை பறித்து தொழிற்சாலைகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர். இதனால் தொழிற்சாலைகளுக்கு தேயிலை வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு மட்டுமின்றி, தேயிலை தொழிற்சாலைகளுக்கும் ஓரளவு கணிசமான வருவாய் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.