கல்லேரியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் ஆய்வு
- ஏரியில் உள்ள நீர் மாசு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதாக கூறி, இருகாலுார் பொதுமக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தினர்.
- கல்லேரிக்கு வந்து, ஏரி மற்றும் கிணறுகளின் நீர் மாசடைந்துள்ளதா என பரிசோதனை செய்ய நீரை சேகரித்து எடுத்துச் சென்றனர்.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இருகாலூர் ஊராட்சி, செல்லப்பம்பட்டி கிராமம் கல்லேரியில், சங்ககிரி ஊராட்சி ஒன்றியம் மூலம் மீன்பிடிக்க குத்தகை ஏலம் விடப்பட்டது.
மீன்பிடி குத்தகைதாரர்கள் மீன்களுக்கு இரையாக கழிவுகளை ஏரியில் கொட்டி மீன் பிடித்து வந்ததாகவும், இதனால் ஏரியில் உள்ள நீர் மாசு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதாக கூறி, இருகாலுார் பொதுமக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தினர்.
இதனையடுத்து, சங்ககிரி ஆர்.டி.ஓ. சவுமியா தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. அதில், மீன்பிடிதாரரர்கள் கழிவுகளை ஏரியில் கொட்ட கூடாது எனவும், மேலும், விவசாய கிணறு, ஏரி தண்ணீரை எடுத்து பரிசோதனை செய்து அதில் தண்ணீர் மாசு அடைந்துள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என கூறினர்.
அதன்படி, நேற்று சேலம் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் விஜய்கோகுல் தலைமையிலான குழுவினர் கல்லேரிக்கு வந்து, ஏரி மற்றும் கிணறுகளின் நீர் மாசடைந்துள்ளதா என பரிசோதனை செய்ய நீரை சேகரித்து எடுத்துச் சென்றனர்.
இந்த ஆய்வின் போது, சங்ககிரி பி.டி.ஓ. முத்து, சேலம் மாவட்ட மீன்வள ஆய்வாளர் (பொறுப்பு) கலைவாணி, ஆர்.ஐ. குணசீலன், வி.ஏ.ஓ சித்ரா மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.